×

மணிப்பூரில் தேர்தல் நெருங்கும் நிலையில் சூறையாடப்பட்ட ஆயுதங்களை ஒப்படைக்க பெட்டிகள் அமைப்பு

இம்பால்: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையின் போது அபகரிக்கப்பட்ட ஆயுதங்களை திரும்ப ஒப்படைக்க பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் இடஒதுக்கீடு விவகாரத்தில் பெரும்பான்மையான மெய்தி பிரிவினருக்கும், பழங்குடியினர்களான குக்கி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது இனக்கலவரமாகி கடந்த 11 மாதமாக மணிப்பூரில் அமைதியின்மை நீடிக்கிறது. இந்த வன்முறைக்கு நடுவே, சுராசந்த்பூரில் போலீசாரின் ஆயுத கிடங்கில் இருந்து சுமார் 6,000 துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வன்முறையாளர்கள் சூறையாடிச் சென்றனர்.

இந்த ஆயுதங்களை திரும்பப் பெற மாநிலத்தின் பல இடங்களில் பெட்டிகள் வைப்பது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதுவரை 1,800 ஆயுதங்கள் மட்டுமே போலீசாருக்கு திரும்ப கிடைத்துள்ளது. இந்நிலையில், வரும் 19 மற்றும் 26ம் தேதிகளில் 2 கட்டமாக மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் நடக்க உள்ள நிலையில், அபகரிக்கப்பட்ட ஆயுதங்கள், பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

இதனால் இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் போலீசார் மீண்டும் ஆயுத ஒப்படைப்பு பெட்டிகளை வைத்துள்ளனர். அதில், ‘தயவுசெய்து அபகரிக்கப்பட்ட ஆயுதங்களை இந்த பெட்டியில் போடுங்கள்’ என்ற வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் மெய்தி மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆயுதங்கள் எப்படி கிடைத்தது என அவற்றை வைத்திருந்தவர்களிடம் எந்தவிதமான கேள்விகளும் கேட்கப்படாது என உறுதிமொழியும் தரப்பட்டுள்ளது.

The post மணிப்பூரில் தேர்தல் நெருங்கும் நிலையில் சூறையாடப்பட்ட ஆயுதங்களை ஒப்படைக்க பெட்டிகள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Lok Sabha ,Meithi ,Kuki ,
× RELATED வெளிமணிப்பூரில் 81.46% வாக்குப்பதிவு