×

சலுகை, அறிவிப்புகள் எதுவுமில்லை; பாஜ தேர்தல் அறிக்கை வெளியீடு

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான பாஜவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இதில் சிறப்பு சலுகைகளோ, அறிவிப்புகளோ எதுவும் இல்லாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே சமயம், சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும், சிஏஏ கட்டாயம் அமல்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி தரப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான பாஜவின் தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாஜவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் வாக்குறுதிகள்:
பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மற்றும் தரமான மருத்துவ சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும். சூரிய ஒளி திட்டத்தின் கீழ் ஏழை வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

மூன்று கோடி கிராமப்புறப் பெண்களை லட்சாதிபதிகளாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தற்போதுள்ள சுகாதார சேவைகளை விரிவுபடுத்தி, ரத்த சோகை, மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகியவற்றைத் தடுப்பதிலும் குறைப்பதிலும் கவனம் செலுத்தி, பெண்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை உறுதி செய்யப்படும். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஒழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அரசு பணிகளில் ஆட்சேர்ப்பு முறையில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்படும். கேள்வித்தாள் கசிவை தடுக்க சட்டம் இயற்றப்படும்.

ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தில் மூத்த குடிமக்களையும் சேர்த்து அவர்களுக்கு இலவச மற்றும் தரமான மருத்துவ வசதி வழங்கும் வகையில் விரிவுபடுத்தப்படும். விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் வலுப்படுத்தப்படும். பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்படும். அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலும் ஆட்டோ, டாக்சி, லாரி ஓட்டுநர்கள் மற்றும் பிற ஓட்டுநர்கள் சேர்க்கப்படுவார்கள். பழங்குடியினரின் சுகாதாரப் பாதுகாப்பிற்கான ஒரு மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை, பழங்குடியின குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் விரிவான சுகாதார சேவைகள் வழங்கப்படும்.

குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) செயல்படுத்தப்படும். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேலை வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும். தரமான கல்வி மற்றும் புதிய உயர்கல்வி நிறுவனங்கள் நிறுவப்படும். வடகிழக்கு மாநிலங்களுக்கிடையேயான எல்லைப் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பாஜவின் தேர்தல் அறிக்கையில், சிறப்பு சலுகைகளோ, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அறிவிப்புகளோ எதுவும் இல்லாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

The post சலுகை, அறிவிப்புகள் எதுவுமில்லை; பாஜ தேர்தல் அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : BJP ,New Delhi ,Modi ,Lok Sabha elections ,CAA ,Dinakaran ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?