×

பிரசாரம் செய்ய விடாமல் அராஜகம்; கம்யூ. வேட்பாளர் வாகனம் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல்: வேடிக்கை பார்த்த சீமான்

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் நேற்று நாகப்பட்டினம் நகர பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். நீலா கீழவீதி வழியாக நீலா வடக்கு வீதியில் பிரசாரம் செய்ய வந்தார். இந்நிலையில் நீலா கீழவீதியில் உள்ள அபிராமிஅம்மன் சன்னதி திடலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து பிரசாரம் செய்ய வாகனத்தில் நின்று இருந்தார்.

இதனால் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் நீலா கீழவீதி வழியாக சென்றால் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என கருதி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி நீலா சன்னதி தெரு வழியாக செல்லும்படி கூறினர். ஆனால் நீலா கீழவீதி வழியாக பிரசாரம் செய்ய ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனுமதி பெற்றுள்ளது. எனவே இந்த சாலை வழியாக செல்கிறோம் என கூறி பிரசார வாகனத்தில் சென்றனர். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் சின்னத்தை கோஷமிட்டு தொண்டர்கள் சென்றனர். இதை கேட்ட நாம் தமிழர் கட்சியினர் அவர்களது சின்னத்தை கோஷமிட்டனர்.

திடீரென நாம் தமிழர் கட்சியினர் இந்திய கம்யூனிஸ்ட் பிரசார வாகனத்தை தடுத்து நிறுத்தி வாகனம் மீது கையால் தாக்குதல் நடத்த தொடங்கினர். உடனே அந்த வாகனம் நிறுத்தப்பட்டவுடன் நாம் தமிழர் கட்சியினர் வாகனத்தின் முன்பக்கத்தில் இருந்து பின்நோக்கி தள்ளினர். இதில் இந்த வாகனத்திற்கு பின்னால் வந்த வேட்பாளர் வாகனத்தில் மோதி நின்றது. இதனால் கோபமடைந்த திமுக நகர செயலாளர் மாரிமுத்து, கவுன்சிலர் அண்ணாதுரை, காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் முகம்மதுநத்தர் ஆகியோர் நாம் தமிழர் கட்சியினரை பார்த்து இதுபோன்ற அரஜாக செயல்களில் ஈடுபடுவது சரியில்லை என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரண்டு பேரையும் சமாதானம் செய்தனர். ஆனால் சமாதானம் அடையாமல் இரண்டு கட்சியினரும் தங்களது வேட்பாளர் பெயர் மற்றும் சின்னத்தை கோஷமிட்டு கொண்டே இருந்தனர். இந்த பிரச்னைகளை அனைத்தும் பெறுமையாக வேடிக்கை பார்த்துவிட்டு பிரசார வாகனத்தில் உள்ளே இருந்து வாகனத்தின் மேல்பகுதிக்கு சீமான் வந்தார். இந்தியா கூட்டணி வேட்பாளர் பிரசாரம் செய்ய வழிவிடுங்கள் என கையால் சைகை செய்தார். இதன்பின்னர் நாம் தமிழர் கட்சியினர் விலகினர். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசாரத்தை தொடர்ந்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
அபிராமி அம்மன் சன்னதி திடலில் பிரசாரம் செய்ய காலை 10 மணி முதல் 11 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் பிரசாரம் செய்ய 11.30 மணிக்கு மேல் சீமான் வருகை தந்துள்ளார். அபிராமி அம்மன் சன்னதி திடல் அமைந்துள்ள நீலா கீழவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வாகனம் வாயிலாக பிரசாரம் செய்ய 11 மணிக்கு மேல் அனுமதி பெற்றுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அனுமதி பெற்ற நேரத்தில், அனுமதி பெற்ற சாலை வழியாக வந்தனர் என்றனர்.

The post பிரசாரம் செய்ய விடாமல் அராஜகம்; கம்யூ. வேட்பாளர் வாகனம் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல்: வேடிக்கை பார்த்த சீமான் appeared first on Dinakaran.

Tags : Tamil Party ,Amused Seeman ,Nagapattinam ,Parliamentary Constituency ,Communist Party of India ,Y. Selvaraj ,Nila North Road ,Nila Keelavedi ,Abirami Amman ,Neela Keezaveedi ,Nam Tamil party ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...