×

ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பால் பனியன் தொழில் பாதிப்பு: கமல் குற்றச்சாட்டு

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் போட்டியிடுகிறார். அவருக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து நேற்று இரவு திருப்பூர் பாண்டியன் நகரில் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: பரப்புரைக்கு நான் வந்ததற்கான காரணம் நாடு காக்கும் தருணம் என்பதால் வந்துள்ளேன். தனக்கான தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல் உலகளாவிய உடை தேவைகளை பூர்த்தி செய்யும் நகரம் இந்த திருப்பூர்.

திருப்பூரில் பனியன் தொழில் மந்தமாக உள்ளது. இதற்கு ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை உயர்வு காரணம். இந்த மந்தமாக உள்ளபோதே ₹40 ஆயிரம் கோடி வர்த்தகம் என்றால் 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும்? அதிக வருவாய் ஈட்டி தரும் திருப்பூரை ஒழுங்காக கவனிக்க முடியவில்லை. இதில் 75 புதிய நகரம் எப்படி பிரதமர் உருவாக்குவார்.

மக்கள் நலனே குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம். செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்பக்கூடாது. கலைஞர் சொல்வதை செய்பவர். திருப்பூர் மாநகராட்சியாக மாறுவதற்கு கலைஞர் முக்கிய காரணம். நிறைய பாலங்கள் சாலைகள் கொடுத்துள்ளார். ஒன்றிய அரசு உதவியை தடை செய்தால் தொகுதியில் வேலை தடைபடும். ஒரு எம்.பிக்கு ₹5 கோடி கொடுப்பார்கள். இங்கு 6 தொகுதி. 6 தொகுதிக்கு ஒரு கோடி கிடையாது. அதற்கும் ஜிஎஸ்டி போடுவது ஒன்றிய அரசு.

ஜிஎஸ்டி போடும்போது சினிமா துறையில் இருந்து நான் குரல் கொடுத்தேன். ஜிஎஸ்டி நல்ல திட்டம் என்றால் அந்த வரி திட்டத்தை சொல்லி பாஜவினர் ஓட்டு கேட்டிருக்கலாம். ஜிஎஸ்டி வேண்டாம் என முழங்கியவர்களில் நானும் ஒருவன். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட ஒன்றிய அரசின் இரட்டை தாக்குதலால் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சு விலை உயர்வு, நூல் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் உலக அளவில் முதல் இடத்தை நெருங்கி கொண்டிருந்ததை இந்தியாவை பின்னால் தள்ளியது பங்களாதேஷ். அங்கு வரி குறைவு. பங்களாதேசில் இருந்து நூல் துணியை இறக்குமதி செய்கின்றனர். இந்த உதாரணம்போதும். ஒன்றிய அரசு என்ன சொன்னாலும் இது மக்களுடன் ஒன்றாத அரசு. எனக்கென்று எதிர்பார்ப்பு இல்லாமல் நமக்காக நான் இங்கு வந்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பால் பனியன் தொழில் பாதிப்பு: கமல் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Kamal ,Subparayan ,Communist Party of India ,Tirupur ,DMK ,People's Justice Center ,President ,Kamal Haasan ,Pandyan Nagar, Tirupur ,Kathir ,Dinakaran ,
× RELATED 40 தொகுதிகளிலும் நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: முத்தரசன் உறுதி