×

நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை என்பது கடும் அச்சத்தை ஏற்படுத்துகிறது: பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை இன்ஸ்டாகிராமில் வேதனை

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடந்த 2017ம் ஆண்டு திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கொச்சி போலீசார் நடிகையின் முன்னாள் டிரைவரான சுனில்குமார் என்பவர் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்திற்கு பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நடிகையை வேனில் வைத்து பலாத்காரம் செய்தபோது அந்தக் கும்பல் செல்போனில் பதிவு செய்தது. பின்னர் போலீசார் அந்தக் காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் வைத்து அந்த மெமரி கார்டை சிலர் திறந்து பார்த்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் அங்கமாலி மாஜிஸ்திரேட் லீனா ரஷீத், மாவட்ட நீதிபதியின் தனி உதவியாளர் மகேஷ் மற்றும் விசாரணை நீதிமன்ற சிரஸ்தார் தாஜுதீன் ஆகியோர் மெமரி கார்டை திறந்து பார்த்தது தெரியவந்தது.

இந்நிலையில் நடிகை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பது:
என்னுடைய வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட மெமரி கார்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஆனால் நீதிமன்றத்தில் இருந்த இந்த மெமரி கார்டை நீதிமன்ற ஊழியர்களே பார்த்துள்ளனர். இது தொடர்பாக எனக்கு அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கையை படித்தபோது அது எனக்கு பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியது.

ஒரு தனி நபருக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள தனி உரிமை இதன்மூலம் மீறப்பட்டுள்ளது. என்னுடைய தனி உரிமைக்கு நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது எனக்கு பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டிய நீதிமன்றத்தில் கூட இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது. ஆனாலும் நீதியை நிலை நாட்டக் கூடியவர்கள் இன்னும் உலகத்தில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதால் என்னுடைய இந்தப் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை என்பது கடும் அச்சத்தை ஏற்படுத்துகிறது: பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை இன்ஸ்டாகிராமில் வேதனை appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Thrissur ,Kochi ,Kochi police ,Instagram ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!