×
Saravana Stores

தமிழகத்தில் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அதிகரிப்பு 1400 கிலோ தங்கம் பறிமுதல் தொடர்பாக ஐ.டி. விசாரணை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தை சேர்ந்த 71 ஆயிரம் ராணுவ வீரர்கள் தபால் மூலமாக வாக்களிக்க உள்ளனர். ராணுவ வீரர்கள் அனைவரும் ஜூன் 4ம்தேதி காலை 8 மணிக்கு முன் தங்களின் வாக்கு சீட்டுகளை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வந்து சேருமாறு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் உள்ள உதவி அலுவலரிடம் தங்களது வரிசை எண் தொடர்பான தகவல்களை கேட்டு தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 18ம் தேதி முதல் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளோம். வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் வீடியோ கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவ படையினர் வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவர் கோரிக்கை வைத்த நிலையில் அதுகுறித்து பரிசீலனையை இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் 190 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பறக்கும் படையினரால் காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனத்தின் பெயர் அடங்கிய பெட்டியில் 1400 கிலோ தங்கம் எடுத்து செல்லப்பட்டதை பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி முதல்கட்ட தகவல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.952 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பல்வேறு பொருட்களும், 2021 சட்டமன்ற தேர்தலில் ரூ.466 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்தில் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அதிகரிப்பு 1400 கிலோ தங்கம் பறிமுதல் தொடர்பாக ஐ.டி. விசாரணை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Election Officer ,Satyaprata Sachu ,Chennai ,Satyaprata Chaghu ,D. ,Dinakaran ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...