சென்னை: தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் சிக்கிய வழக்கில், நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னையில் இருந்து நெல்லைக்கு கடந்த 6ம் தேதி இரவு புறப்பட்டு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தேர்தல் செலவிற்கு பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை தேர்தல் பறக்கும்படை அதிகாரி செந்தில் பாலமணி தலைமையில் பறக்கும் படையினர், தாம்பரம் ரயில்வே போலீசார் மற்றும் தாம்பரம் போலீசார் உதவியுடன் அதிரடி சோதனை செய்தனர். ரயிலில் எஸ்7 கோச் பெட்டியில் 6 பைகளில் மூன்று பேரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், கொளத்தூர், திருவிக நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (33), அவரது தம்பி நவீன் (31), ஸ்ரீவைகுண்டம் பெருமாள் (25) என்பதும், நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கம் பகுதியில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலிலும், நயினார் நாகேந்திரனின் உறவினர் சேப்பாக்கம் பகுதியில் நடத்தி வரும் ஓட்டல் ஒன்றிலும் இருந்து நெல்லைக்கு தேர்தல் செலவுக்கு பணத்தை கொண்டு சென்றதும் தெரிய வந்தது.
சதீஷ் மற்றும் அவரது தம்பி நவீன் இருவரும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கம் பகுதியில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்ததும், பெருமாள் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும், சதீஷிடம் பாஜ உறுப்பினர் அட்டை இருந்ததும், 3 பேரும் பணத்தை திருநெல்வேலிக்கு கொண்டு சென்றதும் தெரிந்தது. இந்த பணம் தாம்பரம் வட்டாட்சியர் நடராஜனிடம் ஒப்படைத்து, அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, பிடிபட்ட 3 பேர் மீதும் தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து 20 நாட்களுக்கு தினமும் காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி மூன்று பேரும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் சதீஷ் 6 வருடங்களாக மேலாளராக வேலை செய்ததும், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி, முருகன், கோவர்தனன் ஆகியோர் பணம் கொடுப்பார்கள்.
அதை மொத்தமாக தங்களிடம் கொண்டு வந்து கொடுக்கும்படி நாகேந்திரன் கூறியதாக வாக்குமூலம் அளித்ததின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவர் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆசைதம்பி, முருகன், சென்னை அபிராமிபுரத்தை சேர்ந்த பாஜ மாநில தொழில்துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், தாம்பரம் பாஜ நிர்வாகியும், கட்டுமான நிறுவன உரிமையாளருமான ஜெய்சங்கர் ஆகியோரும் பணத்தை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 8 பேரும் இந்த வழக்கு தொடர்பாக ஒரு வாரத்திற்குள் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கிரீன்வேஸ் சாலையில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் கொரியன் ரெஸ்டாரன்ட் ஒன்றில் வைத்து ஒரு கோடி ரூபாய் கை மாற்றப்பட்டதால், அந்த கட்டிடத்தின் உரிமையாளர் கோவர்தனனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இந்நிலையில் நேற்று மாலை கோவர்தனனின் மகன் வழக்கறிஞருடன் தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி, தந்தை கோவர்தனனுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தங்களுக்கும் பிடிபட்ட பணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், தந்தை உடல்நிலை சரியான பிறகு அவர் விசாரணைக்கு ஆஜரானார் என எழுதி கொடுத்துவிட்டு சென்றனர்.
The post தாம்பரத்தில் ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய வழக்கு நயினார் நாகேந்திரனுக்கு போலீஸ் சம்மன்: மேலும் 7 பேருக்கும் அனுப்பப்பட்டது appeared first on Dinakaran.