திருமலை: தெலங்கானாவில் கடும் வறட்சியால் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு வருகிறது. சித்திப்பேட்டை மாவட்டம், குக்குனுருப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி பாலா பரமேஷ் கவுட்(32), என்பவர் வங்கியில் கடன் பெற்று விவசாயம் செய்து வந்தார். ஆனால் வறட்சி காரணமாக விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாமல் போனதால் வங்கியில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் இருந்துள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் தொல்லை தாங்க முடியாமல் பாலா பரமேஷ் கவுட் கடந்த 7ம் தேதி விஷம் குடித்து மயங்கினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதேபோல் மேடக் மாவட்டம், சிவம்பேட்டையைச் சேர்ந்த பெண் விவசாயி தலாரி பாலாமணி(43) என்பவர் தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கருடன் கூடுதல் நிலம் குத்தகைக்கு எடுத்து 6 ஏக்கரில் நெல் பயிரிட்டார்.
ஆனால் 6 ஏக்கர் விவசாய நிலமும் காய்ந்ததால் கடந்த 8ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஏற்கனவே 3 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மேலும் இரண்டு விவசாயிகள் இறந்தது தெலங்கானா விவசாயிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை appeared first on Dinakaran.