திருச்சி, ஏப்.14: திருச்சி மாவட்டத்தில் 4 மையங்களில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் ஐஐடிஜேஇ, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கான குறுகியகால பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு கிராமப்புற அடித்தட்டு அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவம், ஐஐடி, என்ஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் வாய்ப்பை பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி இத்தேர்வில் கலந்து கொள்ள அவர்களை தயார்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படித்து வரும் மாணவர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி நடப்பு கல்வியாண்டில் ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியவுடன் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு இத்தேர்வுகளை எழுதுவதற்குரிய பயிற்சிகள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். பயிற்சியுடன் வாரந்தோறும் ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் வெள்ளிக்கிழமைகளில் தேர்வு நடத்தப்படும். இதில் விருப்பமுள்ள மாணவ, மாணவியர் சேர்ந்து பயன் பெறலாம். இதுமட்டுமின்றி தற்போது பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 இறுதி தேர்வு முடித்த மாணவர்களுக்கு குறுகிய கால பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி ஒரு மாவட்டத்துக்கு 4 முதல் 5 பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையங்களில் கல்வி கற்பிப்பதற்காக திறமையான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வாரந்தோறும் பாடம் நடத்தப்பட்டு வார இறுதியில் தேர்வுகள் நடத்தப்படும். குறுகிய கால பயிற்சி நிறைவடைந்த பின்னர் வரும் மே.5ம் தேதி இப்பயிற்சி வகுப்புக்கான இறுதி தேர்வு நடத்தப்படும். திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை ஆண்கள் மேல்நிலை பள்ளி, மண்ணச்சநல்லூர் பெண்கள் மேல்நிலை பள்ளி, துறையூர் பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் திருச்சி சையது முர்துஷா மேல்நிலை பள்ளி ஆகியவற்றில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பயிற்சி வகுப்பில் தற்போது 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்ந்து ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.
The post உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம் appeared first on Dinakaran.