கந்தர்வகோட்டை, ஏப்.14: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியங்களில் தானிய தங்கம் என்று சொல்லக்கூடிய முந்திரி கொட்டை காய்க்க தொடங்கியது. இப் பகுதியில் பருவ மழை போதிய அளவில் இல்லாததால் முந்திரி காய்ப்பு சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாள் முந்திரிக்கொட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம். தற்சமயம் போதிய மழை இல்லாததால் காய்ப்பு தன்மை குறைந்துள்ளது என விவசாயிகள் கூறுகிறார்கள்.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வேலாடி பட்டி,பகுதியில் சுமார் 800 ஏக்கர் நில பரப்பில் முந்திரி காடுகள், இதே போல் கோமாபுரம் ஊராட்சியில் 400 ஏக்கர் பரப்பளவில் முந்திரிக்காடுகளும், வெள்ளாளவிடுதி அரசு பண்ணையில் 50 ஏக்கர் முந்திரியும், பெருங்களூர் ஊராட்சியில் 200 ஏக்கர் நில பரப்பளவில் தமிழ்நாடு அரசு வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அரசு ஆண்டுதோறும் ஏலம் விட்டு வருமானம் ஈட்டி வருகிறது. இதே போல் தனியார் வசம் குறைந்தபட்சம் 3000 ஏக்கர் பரப்பளவில் முந்திரி காடுகள் உள்ளன. முந்திரிக் காடுகள் தற்சமயம் பூ பூத்து காய் காய்க்க தொடங்கியுள்ளது தை, மாசி மாதங்களில் மழை பெய்திருந்தால் முந்திரி கொட்டைகளின் மகசூல் எடுத்து சித்திரையில் விற்பனை செய்து இருக்கலாம்.
தமிழகத்தில் அதிக நிலப்பரப்பில் இந்தப் பகுதியில் முந்திரிக்காடு உள்ளதால் அரசு முந்திரி தொழிற்சாலை ஒன்று கந்தர்வகோட்டை பகுதியில் அமைக்க வேண்டும். அரசு முந்திரி தொழிற்சாலை தொடங்கினால் மக்களுக்கு நல்லதொரு வேலை வாய்ப்பு உருவாக வாய்ப்பு உள்ளது மேலும் வேலையில்லா திண்டாட்டம் குறையும் இளைஞர்களை நல்வழிப்படுத்திச் செல்ல தொழிற்சாலைகள் பங்கு முக்கிய பங்கு உள்ளது . இப்பகுதியில் முந்திரிப் பருப்புக்கு ஆண்டு முழுவதும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது எனவே விலையை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் .1 ஏக்கர் முந்திரி நிலப்பரப்பில் 500 கிலோ முதல் 650 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
ஏக்கர் ஒன்றுக்கு 45 ஆயிரம் முதல் 59 ஆயிரம் வரை மகசூல் மூலம் வருவாய் கிடைக்க வழிவகை உள்ளது என்று கூறும் நிலையில் வேளாண்மை துறையினர் கருவேல மரங்களை அழித்துவிட்டு முந்திரி மரங்களை புதியதாக பதியம் செய்ய முன்வர வேண்டும் எனவும் இதனைப் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். எனவே தரிசு நிலம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அனந்து நிலப்பரப்புகளிலும் முந்திரி மரங்களை வளர்க்க வனத்துறையும் ,வேளாண்மை துறையும் முன் வர வேண்டும் மேலும் முந்திரி காடுகள் உள்ள அனைத்து நிலங்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து சொட்டுநீர் பாசனம் செய்து மகசூல் பெற்று அரசுக்கு அதிக வருவாய் ஈட்ட வழிவகை செய்யலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
The post கந்தர்வகோட்டையில் முந்திரி விளைச்சல் துவங்கியது appeared first on Dinakaran.