×
Saravana Stores

ராமநாதபுரத்தில் விமான நிலையம் நவாஸ்கனி எம்பி தேர்தல் அறிக்கை வெளியீடு

ராமநாதபுரம், ஏப்.14: நவாஸ் கனி எம்பியின் அறிவுறுத்தலின்படி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அறிவியல் ஆலோசகராகவும், உதவியாளராகவும் பணிபுரிந்த பொன்ராஜ் தலைமையிலான குழுவினர் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஒரு மாத காலம் ஆய்வு செய்து தயாரித்த தேர்தல் அறிக்கையினை நவாஸ் கனி மற்றும் பொன்ராஜ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

அதில் ‘‘33 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையில் சொந்த நிதியிலிருந்து ஆண்டிற்கு 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி உதவி வழங்கப்படும். தமிழ்நாடு இலங்கை மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்தோ ஸ்ரீலங்கன் ஃபிஷரீஸ் கார்ப்பரேஷன் அமைப்பினை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கச்சத்தீவை மீட்கவும் அல்லது கச்சத்தீவு பகுதியில் தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடிக்கும் வண்ணம் நிரந்தர குத்தகைக்கு எடுக்கவும் கடும் முயற்சி எடுக்கப்படும்.

100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தி 400 ரூபாய் கூலியை உயர்த்தி அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரி, விவசாயம் செழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரத்தில் விமான நிலையம் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு விமான முனையம் அமைக்க ஏற்கனவே நான் எடுத்த முயற்சியை தொடர்வேன். புதிய அதிவேக ரயில்கள் ராமேஸ்வரத்திற்கு சென்னையில் இருந்து இயக்கப்படவும், அதன் மூலம் சர்வதேச சுற்றுலாத்தலமாக ராமேஸ்வரத்தையும், தனுஷ்கோடியையும் மாற்றுவதற்கு அனைத்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

தங்கச்சிமடம் ரயில்வே நிலையம் மீண்டும் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரம் நாடாளுமன்ற கடலோர பகுதியில் ஒரு சிறந்த துறைமுகத்தை உருவாக்கி, சர்வதேச சரக்கு வழித்தடமாக அது மாறுவதற்கு, பொருளாதார மண்டலமாக உயர்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து திருத்தலங்களையும், தேவாலயங்களையும், மசூதிகளையும் இணைத்து பக்தி சுற்றுலா சர்க்யூட் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு பகல் நேர விரைவு வண்டி இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் கல்வி, மருத்துவம், தனித்திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு, விவசாயம், நெசவுத்தொழில், மற்ற தொழில் துறைகளில் சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தி அதன் மூலம் இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும், பொது மக்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்கக் கூடிய அளவில் திட்டங்களை செயல்படுத்த முயற்சிகள் மேற்க்கொள்ளப்படும்.

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் விவசாயம், மீன் பிடித்தல் மற்றும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு கிளஸ்டர் பூங்காக்கள் நிறுவி அதன் மூலம் அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன். சாயல்குடியில் அரசு போக்குவரத்து பணிமனை அமைக்க மாநில அரசு அணுகி அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ராமநாதபுரத்தில் விமான நிலையம் நவாஸ்கனி எம்பி தேர்தல் அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram Airport ,Ramanathapuram ,Nawaz Ghani ,Ponraj ,President ,Abdul Kalam ,
× RELATED பரமக்குடி அருகே ரயில் பிரேக் ஷூ கழன்று வந்து தாக்கியதில் விவசாயி பலி