×

சென்னை அருகே தேர்தல் பறக்கும்படை சோதனையில் மினிலாரியில் ₹1000 கோடி மதிப்புள்ள 1425 கிலோ தங்ககட்டிகள் சிக்கியது: ஆவணத்தில் 400 கிலோவுக்கு மட்டுமே கணக்கு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் குன்றத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 1,425 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம்,பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 7 பறக்கும் படை அதிகாரிகள் கொண்ட குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் குன்றத்தூர் அருகே வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலை மேம்பாலம் தனியார் கல்லூரி அருகே நேற்று பெரும்புதூர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சாந்தி தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னை விமான நிலையத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 1,425 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், ஹாங்காங்கிலிருந்து 1,425 கிலோ தங்க கட்டிகளை சென்னை விமான நிலையத்திற்கு அரசு அனுமதியுடன் கொண்டு வந்து, அங்கிருந்து முறைப்படி பெரும்புதூர் அடுத்த மண்ணூரில் அமைந்துள்ள சேமிப்பு குடோன் ஒன்றுக்கு கொண்டு செல்வதாகவும், அங்கிருந்து பல்வேறு நகை கடைகளுக்கு தங்க கட்டிகளை பிரித்து சப்ளை செய்யப்படும் என அதில் இருந்த ஊழியர்கள் கூறினர். ஆனால், அவர்கள் வைத்திருந்த ஆவணத்தில் 400 கிலோ தங்கக் கட்டிகள் உள்ளது என்று மட்டுமே இருந்தது.

மேலும் விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள், தங்கம் கொண்டு வந்த லாரியை பறிமுதல் செய்து பெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லை என்றால், பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள் அனைத்தும் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும், ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் மீண்டும் அந்த தங்க கட்டிகள் சப்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று ஸ்ரீபெரும்புதூர் கோட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தங்கக் கட்டிகளின் சர்வதேச மதிப்பு ₹1000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகளின் முழுமையான சோதனைக்குப் பிறகே பிடிபட்ட தங்கக் கட்டிகளின் மொத்த எடை எவ்வளவு என்று துல்லியமாக தெரியவரும். இதனிடையே இவ்வளவு பெரிய அளவில் தங்கக் கட்டிகளை நகைகள் செய்வதற்காக பெரிய நிறுவனங்கள் ஏதேனும் வாங்கிச் சென்றதா அல்லது சர்வதேச தங்கம் கடத்தும் கும்பல் ஏதேனும் சட்டவிரோதமாக கொண்டு சென்றதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குன்றத்தூர் அருகே 1,425 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை அருகே தேர்தல் பறக்கும்படை சோதனையில் மினிலாரியில் ₹1000 கோடி மதிப்புள்ள 1425 கிலோ தங்ககட்டிகள் சிக்கியது: ஆவணத்தில் 400 கிலோவுக்கு மட்டுமே கணக்கு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kunratur ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே...