×

ஹாட்ரிக் வெற்றிக்கு மும்பை முனைப்பு: முட்டுக்கட்டை போடுமா சிஎஸ்கே?

மும்லை: ஐபிஎல் டி20 தொடரின் 29வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று இரவு பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் போட்டியில் தலா 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்ற முன்னாள் சாம்பியன் மும்பை அணியும், நடப்பு சாம்பியன் சென்னையும் மோதும் ஆட்டங்கள் எப்போதும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே இருக்கும். ஹாட்ரிக் தோல்வியில் சிக்கித் தவித்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணிக்கு கிடைத்த அடுத்தடுத்த 2 வெற்றிகள், அந்த அணியை உற்சாகப்படுத்தி உள்ளது.

இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள மும்பை, முதல் 3 ஆட்டங்களில் குஜராத், ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளிடம் மண்டியிட்டது. அதன் பிறகு டெல்லி, பெங்களூரு அணிகளை வீழ்த்தி, இப்போது ஹாட்ரிக் வெற்றிக்காக சென்னையை எதிர்கொள்கிறது. ரோகித், இஷான், சூரியகுமார், திலக் வர்மா, ஹர்திக், டிம் டேவிட் என்று அதிரடி பேட்ஸ்மேன்கள் அணிவகுப்பதால், மும்பை ரன் குவிப்பை கட்டுப்படுத்துவது சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும், பும்ரா, கோட்ஸீ வேகமும் சென்னை வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது.

குறிப்பாக, பும்ரா சூப்பர் பார்மில் இருக்கிறார். ஆர்சிபி அணிக்கு எதிராக விக்கெட் வேட்டை நடத்திய அவர் 4 ஓவரில் 21 ரன் மட்டுகே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்த உற்சாகத்துடன் புள்ளிப் பட்டியலில் மேலும் முன்னேற சென்னை அணி வரிந்துகட்டுகிறது. முதல் 2 ஆட்டங்களில் பெங்களூரு, குஜராத் அணிகளை வீழ்த்திய சென்னை, அடுத்த 2 ஆட்டங்களில் டெல்லி, ஐதராபாத் அணிகளிடம் மண்ணை கவ்வியது.

இக்கட்டான நிலையில், பலம் வாய்ந்த கொல்கத்தாவுக்கு முதல் தோல்வியை பரிசளித்தது சிஎஸ்கே வீரர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. கேப்டன் ருதுராஜுக்கு, கீப்பர் டோனியின் அனுபவ ஆலோசனைகள் உறுதுணையாக உள்ளன. ரச்சின், மிட்செல், துபே, ரகானே, ஜடேஜா அதிரடியும் எதிரணி பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும். முஸ்டாபிசுர், தீக்‌ஷனா, ஷர்துல், தேஷ்பாண்டே வேகமும், ஜடேஜா சுழலும் மும்பைக்கு நெருக்கடி கொடுக்கும். சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இப்போட்டி, ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

* இரு அணிகளும் மோதிய 36 ஆட்டங்களில் மும்பை 20, சென்னை 16ல் வென்றுள்ளன.
* அதிகபட்சமாக மும்பை 219, சென்னை 218 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக மும்பை 136, சென்னை 79 ரன் எடுத்துள்ளன.

The post ஹாட்ரிக் வெற்றிக்கு மும்பை முனைப்பு: முட்டுக்கட்டை போடுமா சிஎஸ்கே? appeared first on Dinakaran.

Tags : Mumbai ,CSK ,Mumlai ,IPL T20 series ,Mumbai Indians ,Chennai Super Kings ,IPL ,Dinakaran ,
× RELATED மும்பையில் பல இடங்களில் மழை நீர் தேக்கம்