×

மக்களவை தேர்தல் நேரத்தில் ரூ.1.65 லட்சம் கோடியை பெற்றது ஒன்றிய அரசு: மோடியால் திவாலாகிறதா ரிசர்வ் வங்கி? கையிருப்பு ரூ.30 ஆயிரம் கோடியாக சரிந்ததால் பொருளாதார நிபுணர்கள் கவலை

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளையும் கண்காணிக்கும், பொருளாதாரத்தை கட்டுக்குள் வைத்திருக்கும், ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அத்தனை பொறுப்புகளை கொண்ட ரிசர்வ் வங்கியையும் திவால் நிலைக்கு தள்ளியிருக்கிறது மோடி அரசு. மக்களவை தேர்தல் காலத்தில்கூட ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.1.65 லட்சம் கோடியை ஒன்றிய அரசு பெற்று இருக்கிறது. இதனால் ​​ரிசர்வ் வங்கியின் கையிருப்பு தற்போது ரூ.30,000 கோடியாக சரிந்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கியும் திவால் நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கி தனது உபரி நிதியைத்தான் ஒன்றிய அரசுக்கு வழங்கி வந்தது. ஆனால் மோடி அரசு வந்தபிறகு அதுவும் 2014ம் ஆண்டுக்கு பிறகு ஒட்டுமொத்த ரிசர்வ் வங்கி லாபம் மற்றும் உபரி நிதியை ஒன்றிய அரசு பெற்று வந்துள்ளது. அதுவும் 2014 முதல் 2024 வரை கிட்டத்தட்ட ரூ.9 லட்சம் கோடி நிதியை ரிசர்வ் வங்கியிடம் இருந்து மோடி அரசு வலுக்கட்டாயமாக பெற்று இருக்கிறது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். 2014க்கு முன், எந்த அரசும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து ‘உபரி பணம் – மொத்த லாபம்’ முழுவதையும் எடுத்ததில்லை என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.

ஒரு பகுதியை மட்டும் அரசுக்கு ஈவுத்தொகையாக ரிசர்வ் வங்கி கொடுத்து வந்தது. ஆனால் இப்போது அத்தனையும் தலைகீழ். வருடாவருடம் வரும் வருமானத்தையும், உபரி நிதியையும் கண்டிப்பாக கொடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டு இருக்கிறது. இதனால் தான் ரிசர்வ் வங்கியின் கையிருப்பு வெறும் ரூ.30 ஆயிரம் கோடிக்குள் சுருங்கி திவால் நிலைக்கு வந்து இருக்கிறது. 2018ம் ஆண்டு, உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது, ​​மோடி அரசு அனைத்து லாப பணத்தையும் கொடுக்கும்படி ரிசர்வ் வங்கியிடம் கேட்டது. இருப்பினும், விதிகளின்படி உர்ஜித் படேல் ஒன்றிய அரசுக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.

மோடி கேட்டும் பணம் கொடுக்கவில்லை என்றால் என்ன ஆகும்?. பல்வேறு அழுத்தம் காரணமாக ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்தார். அதற்கு என்ன காரணம் என்று அவரும் சொல்லவில்லை. ஒன்றிய அரசும் தெரிவிக்கவில்லை. இது மோடி ஆட்சியின் வழக்கம் தானே?. உர்ஜித் படேல் ராஜினாமாவுக்கு பின்னர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. இந்த குழு ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்களை அத்தனையையும் மாற்றி அமைத்தது. தன்னாட்சி அதிகாரத்தை ஒடுக்கியது. மேலும் ஒன்றிய அரசு கேட்கும் போதெல்லாம் நிதி கொடுக்க வழிவகை செய்தது.

அதாவது மோடி உத்தரவுக்கு ஏற்ப அத்தனை சட்டதிட்டங்களும் உடனே பிமல் ஜலான் தலைமையிலான குழுவால் மாற்றி அமைக்கப்பட்டதால் இன்று ரிசர்வ் வங்கியின் மொத்த வருமானமும், கையிருப்பும் ஒன்றிய அரசுக்கு கொண்டு செல்ல வழி வகுத்துள்ளது. இந்த அரசு தனக்கென ரிசர்வ் வங்கியின் விதிகளை மட்டும் மாற்றியமைக்காமல் கார்ப்பரேட் மற்றும் நிறுவனங்களுக்காக அனைத்து சட்டங்களையும் மாற்றிவிட்டது. இதனால் கடந்த 3 முதல் 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் நிறுவனங்கள் திவாலாகின. வங்கிகளின் கடன்கள் மூழ்கியது. அதே சமயம் 70 ஆயிரம் புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டு புதிய கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதான் மோடி அரசின் பொருளாதார தந்திரம். இன்றைக்கு ரிசர்வ் வங்கிக்கு எதிர்பார்த்த ரூ.74 ஆயிரம் கோடி லாபம் கிடைக்காமல், இருந்திருந்தால் வங்கிகள் நிலை என்ன ஆகியிருக்கும்?. மூழ்கும் வங்கிகளை யார் காப்பாற்றுவது? லட்சுமி விலாஸ், யெஸ் வங்கி, டிஎச்எப்எல் போன்ற வங்கிகள் நிலைதான் அனைத்து வங்கிகளுக்கும் ஏற்பட்டு இருக்கும். லட்சுமி விலாஸ் சிங்கப்பூர் வங்கிக்கு விற்கப்பட்டது. மற்ற இரண்டு வங்கிகளின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருந்தால், அரசு நேரடியாக ரிசர்வ் வங்கியிடம் கேள்வி கேட்க வேண்டும் என்கிறது அரசியல் சாசன விதி. மேலும் ரிசர்வ் வங்கியும் உரிய பதிலை அளிக்க வேண்டும்.

ஆனால், கடந்த 6 மாதங்களாக, பணவீக்கக் குறியீடு உயர்ந்து வந்தாலும், அரசு கேள்வி கேட்கவில்லை, ரிசர்வ் வங்கி எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் மோடி அரசு எதையும் செய்யவில்லை. இன்றைய ரிசர்வ் வங்கி ஒன்றிய அரசால் நியமிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது நாட்டின் பொருளாதார சரிவுக்கு பணவீக்கத்திற்கு யார் பொறுப்பு கூற முடியும்?. உர்ஜித் படேலுக்கு பிறகு ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டு இருக்கும் சக்திகாந்த தாஸ் சொல்வாரா? அப்படி அவர் சொன்னால் அவருக்கும் உர்ஜித் படேல் கதிதான்.

இது ஏன், எப்படி நடந்தது? ஏன் இதைப்பற்றி மக்களோ அல்லது ஊடகங்களோ எந்தவித விவாதத்தையும் மேற்கொள்ளவில்லை என்றால் நாட்டின் வளர்ச்சியை விட, பொருளாதாரத்தை விட வேறுசில விஷயங்களில் மக்களின் கவனத்தை அழகாக மோடி அரசு திசைதிருப்பியிருப்பதுதான் இதற்கு காரணம். எந்த ஒரு பொருளாதார விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் சென்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாட்டிற்கு வந்தால் கச்சத்தீவு பற்றியும், வடமாநிலங்களுக்கு சென்றால் ராமர் கோயில் திறப்பு விழா பற்றியும் மட்டுமே மோடி பேசி வருகிறார். இதே போல் பேசி, பேசி தான் நாட்டின் அத்தனை வளங்களும் மோடி அரசால் சூறையாடப்பட்டு வருகின்றன.

* இந்திய ரிசர்வ் வங்கி 1935ல் தொடங்கப்பட்டது. 1949ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே நாட்டின் கருவூலம் ஆகும்.
* நாட்டின் செலாவணிக்குரிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிடுகிறது.
* இந்திய நாட்டின் நாணய மதிப்பு ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது.

* இந்திராகாந்தி கேட்டும் மறுத்த ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் வரவு நிதி மற்றும் உபரி நிதியை ஒவ்வொரு முறையும் ஆட்சியில் உள்ள அரசுகள் பெற்று வருவது வழக்கம். அதுவும் ரிசர்வ் வங்கி சம்மதித்தால், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டால் தான் அவை நடந்தது. அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் கோடி நிதிதான் எடுக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு முன்பு வங்கதேச பிரிவினை போரில் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ரிசர்வ் வங்கியிடம் அதிகபட்சமாக ரூ.70 ஆயிரம் கோடி நிதி கேட்டார். ஆனால் சட்டத்தை விளக்கி நிதிகொடுக்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. அதை இந்திராவும் ஏற்றுக்கொண்டார். ஆனால் மோடி அரசு அமைந்தபிறகு எல்லாம் தலைகீழாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* மன்மோகன்சிங் ஆட்சியில் வாங்கியது ரூ.1 லட்சம் கோடி; மோடி வாங்கியது ரூ.9 லட்சம் கோடி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 2006 முதல் 2014 வரையிலான 8 ஆண்டு ஆட்சி காலத்தையும், 2014 முதல் 2024 வரையிலான மோடியின் 10 ஆண்டு ஆட்சி காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், மன்மோகன்சிங்கின் ஆட்சிக் காலத்தில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஒன்றிய அரசு ரூ.1,01,679 கோடி மட்டுமே எடுத்துள்ளது. அதேசமயம், மோடியின் ஆட்சிக் காலத்தில் இந்த தொகை ரூ.9 லட்சம் கோடி. மன்மோகன்சிங் ஆட்சி காலத்தை விட 9 மடங்கு அதிகம். இதற்குப் பெயர் தான் ‘சிஸ்டம் மூலம் தந்திரமாக நடக்கும் ஊழல்’ உண்மையில் ரிசர்வ் வங்கியை திவால் நிலைக்கு கொண்டு வந்தது யார் என்பது இதன் மூலம் தெரியும்.

* 67 ஆண்டுகளில் நாட்டின் கடன் ரூ.55 லட்சம் கோடி; மோடியின் 10 ஆண்டில் ரூ.170 லட்சம் கோடி கடன்
2004ல் உள்நாட்டு ஜிடிபி ரூ.50 லட்சம் கோடி. 2014ல் மன்மோகன்சிங் ஆட்சி முடியும் போது ரூ.100 லட்சம் கோடி. இன்று ரூ.184 லட்சம் கோடி என்றநிலையில் தான் இருக்கிறது. மோடி ஆட்சியின் இந்த 10 ஆண்டுகளில் குறைந்தது ரூ.200 லட்சம் கோடியை தாண்டியிருக்க வேண்டாமா என்பது தான் பொருளாதார நிபுணர்களின் கேள்வி. அதே போல் தான் சுதந்திரம் அடைந்தது முதல் மன்மோகன்சிங் ஆட்சி காலம் வரை, அதாவது 2014ம் ஆண்டு வரை நாட்டின் மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடி தான். ஆனால் இன்று நாட்டின் மொத்த கடன் தொகை ரூ.225 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. அதாவது மோடி ஆட்சியின் இந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டின் கடன் தொகை ரூ.170 லட்சம் கோடி உயர்ந்து இருக்கிறது. ஏன் என்று கேட்பார் யாரும் இல்லை. மோடி அரசை எதிர்த்து கேட்பவர்கள் வெளியே இருந்ததில்லை. ஈடி, ஐடி, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் மூலம் உள்ளே இருக்க வேண்டியது தான். அந்த நிலையைத்தான் மோடி அரசு உருவாக்கி இருக்கிறது.

ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த
நிதி விவரம்
2009 ரூ.25,009 கோடி
2010 ரூ.18,756 கோடி
2011 ரூ.15,009 கோடி
2012 ரூ.16,010 கோடி
2013 ரூ.33,110 கோடி
2014 ரூ.52,679 கோடி
2015 ரூ.65,896 கோடி
2016 ரூ.65,876 கோடி
2017 ரூ.30,659 கோடி
2018 ரூ.50,000 கோடி
2019 ரூ.1,76,051 கோடி
2020 ரூ.57,128 கோடி
2021 ரூ.99,122 கோடி
2022 ரூ.30,307 கோடி
2023 ரூ.87,416 கோடி
2024 ரூ.1,65,000கோடி

The post மக்களவை தேர்தல் நேரத்தில் ரூ.1.65 லட்சம் கோடியை பெற்றது ஒன்றிய அரசு: மோடியால் திவாலாகிறதா ரிசர்வ் வங்கி? கையிருப்பு ரூ.30 ஆயிரம் கோடியாக சரிந்ததால் பொருளாதார நிபுணர்கள் கவலை appeared first on Dinakaran.

Tags : Union government ,Lok Sabha elections ,RBI ,Modi ,Modi government ,Reserve Bank ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு