×

இந்தியா கூட்டணிக்கு அமோக வெற்றி தமிழ்நாட்டில் பாஜவுக்கு ‘0’ தான்: ப.சிதம்பரம் கணிப்பு

கொல்கத்தா: ‘தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இந்தியா கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும். அங்கு ஒரு இடத்தில் கூட பாஜவால் ஜெயிக்க முடியாது’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறி உள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமோக வெற்றியை பதிவு செய்யும் என என்னால் நம்பிக்கையுடன் கணிக்க முடியும். அதே போல கேரளாவிலும் இரண்டு முன்னணிகளும் (யுடிஎப் மற்றும் எல்டிஎப்) 20 இடங்களைப் பகிர்ந்து கொள்ளும். இவ்விரு மாநிலத்திலும் பாஜ ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது. கர்நாடகா, தெலங்கானாவிலும் காங்கிரஸ் வலுவாக இருக்கிறது. எனவே 2019 மக்களவை தேர்தலில் பெற்றதை விட காங்கிரஸ் (2019ல் 53 தொகுதிகளில் வென்றது) இம்முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்.

ஜார்க்கண்ட், அரியானா, பீகார், உபி மற்றம் டெல்லியில் இந்தியா கூட்டணிக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. இந்த தேர்தலில் மம்தா முக்கிய பங்கு வகிக்கிறார். மேற்கு வங்கத்தில் தனது கோட்டையை அவர் தக்க வைத்துக் கொள்வது இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் இந்து விரோதிகள் என முத்திரை குத்துவதும், இந்துக்களின் ரட்சகனாக மோடியை உயர்த்திப் பிடிப்பதும் பாஜவின் தேர்தல் உத்தியே தவிர வேறொன்றுமில்லை. இந்து மதம் எந்த ஆபத்திலும் இல்லை. ஆனால் இந்துக்கள் மத்தியில் இல்லாத பயத்தை செயற்கையாக உருவாக்க முயற்சிக்கிறார் மோடி.

கச்சத்தீவு விவகாரம் முடிந்து போன விஷயம். ஆனால் சீனா நமது எல்லையையும், ரோந்து பகுதிகளையும் கபளீகரம் செய்வதை மறைக்க கச்சத்தீவு பிரச்னையை பிரதமர் மோடி கையில் எடுத்துள்ளார். கடந்த 10 ஆண்டாக ஆட்சியில் இருந்த போது கச்சத்தீவு பற்றி என்ன நடவடிக்கை எடுத்தது பாஜ? இப்போது தேர்தல் ஆதாயத்திற்காக இவ்வாறு பேசுவது இலங்கை அரசுக்கும், சிங்களர்களுக்கும் அங்குள்ள தமிழ் பேசும் மக்களுக்கும் இடையே மோதலை உருவாக்கும் என்பதை மோடியும், அவரது சகாக்களும் நன்கு அறிந்ததே. இருப்பினும், வேண்டுமென்றே தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்கு அவர்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்தியா கூட்டணிக்கு அமோக வெற்றி தமிழ்நாட்டில் பாஜவுக்கு ‘0’ தான்: ப.சிதம்பரம் கணிப்பு appeared first on Dinakaran.

Tags : India alliance ,Tamil Nadu ,BJP ,P. Chidambaram ,Kolkata ,Kerala ,Senior ,Congress ,Kolkata, West Bengal ,
× RELATED பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட...