×

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்: ராகுல் வாக்குறுதி

பண்டாரா: ‘ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள சகோலியில் நேற்று நடந்த பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும். நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நாங்கள் நடத்துவோம். தற்போது, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கத்தால் மக்கள் துயரத்தில் உள்ளனர். வெறும் ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பவர்களும், கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களும் ஒரே ஜிஎஸ்டி வரியை செலுத்தும் நிலை உள்ளது. அக்னி வீரர் திட்டத்திற்கு ராணுவமே ஆதரவாக இல்லை. எனவே காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் அத்திட்டம் ரத்து செய்யப்படும்.

தன்னை ஓபிசி என கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, அந்த சமூகத்தினருக்காக 10 ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தார்? ஒரு சில தொழிலதிபர்களுக்காக மட்டும்தான் ஒன்றிய அரசு வேலை செய்கிறது. சாமானியர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நாட்டின் 50 சதவீத மக்கள் வைத்திருக்கும் சொத்துக்கு இணையான சொத்து வெறும் 22 பேரிடம் உள்ளது. ஆனால் மோடி மதத்தை பற்றி மட்டுமே பேசி சாதிகள் மற்றும் சமூகங்களுக்கு இடையே பகையை உருவாக்க முயற்சிக்கிறார். மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் கவுதம் அதானி குழுமத்தின் பங்கு வானுயர உயர்ந்து விட்டது. இப்போது அவர் விமான நிலையங்கள் முதல் துறைமுகங்கள் வரை சாலைகள், பாலங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் என அனைத்துத் துறைகளிலும் கால் பதித்து விட்டார். இவ்வாறு ராகுல் பேசினார்.

* அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும்
முன்னதாக சட்டீஸ்கரின் பஸ்தார் கிராமத்தில் நடந்த பிரசாரத்தில் ராகுல் பேசுகையில், ‘‘நாட்டில் உள்ள பழங்குடியின சமூகங்களின் மதம், சித்தாந்தம் மற்றும் வரலாற்றை பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் தாக்கி வருகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு பழங்குடியினப் பெண் என்பதால் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை. இது பாஜ கட்சியின் மனநிலையை பிரதிபலிக்கிறது. மோடி 24 மணி நேரமும் 25 தொழிலதிபர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற நாட்டின் முக்கிய பிரச்னைகைளை எந்த ஊடகங்களும் காட்டுவதில்லை. மோடி விமானத்தில் பறப்பதையும், கடலுக்கடியில் செல்வதையும், கோயிலில் வழிபடுவதையும்தான் காட்டுகின்றனர். நாட்டில் காடுகளின் பரப்பளவு குறைந்து, அதானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை அழித்து விடுவார்கள். எனவே அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது’’ என்றார்.

The post காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்: ராகுல் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Congress ,Rahul ,Bhandara ,Former ,president ,Rahul Gandhi ,Sakoli ,Bandara district ,Maharashtra ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...