புதுடெல்லி: தேர்தல் பத்திரம் மூலம் பாஜவுக்கு அதிகமான நிதி தந்த மேகா இன்ஜினியரிங் நிறுவனம் மீது லஞ்ச புகாரில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் ரூ.966 கோடியை கட்சிகளுக்கு நன்கொடையாக செலுத்தியது. தேர்தல் பத்திரத்தில் அதிக நன்கொடை கொடுத்த 2வது நிறுவனம் இது. அதிகபட்சமாக பாஜவுக்கு மட்டுமே ரூ.586 கோடியை கொடுத்துள்ளது.
இந்நிலையில், ஜக்தால்பூர் ஒருங்கிணைந்த எஃகு ஆலை தொடர்பான பணிகளுக்கான ரூ.174 கோடி பில் கட்டணத்தை வழங்க மேகா நிறுவன அதிகாரிகள் ரூ.78 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஒன்றிய எஃகு அமைச்சகத்தின் கீழ் வரும் என்ஐஎஸ்பி, என்எம்டிசி மற்றும் பொதுத்துறை நிறுவனமான மேகான் ஆகியவற்றின் 8 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 2023 ஆகஸ்ட் 10 ம் தேதி தொடங்கப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தேர்தல் பத்திரம் மூலம் பாஜவுக்கு அதிக நிதி தந்த நிறுவனம் மீது சிபிஐ வழக்கு appeared first on Dinakaran.