×
Saravana Stores

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தீவிரம்: புகைப்படம் வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்!

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கியது. மதுரை தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக ரூ.1977.8 கோடி பட்ஜெட்டில் ஜப்பான் நாட்டு ஜெய்கா நிதிநிறுவனத்துடன், கடந்த 2021ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பீட்டில் 82% சதவீத தொகையான ரூ.1627.70 கோடி, ஜெய்கா நிறுவனம் மூலம் கடனாக பெறப்படும் எனவும், மீதமுள்ள தொகையை ஒன்றிய அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக வேறு எந்த கட்டுமான பணிகளும் நடைபெறவில்லை.

இதற்கிடையே, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கு மதுரை அருகே, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் செய்முறை வகுப்பு நடத்த திட்டமிட்டு விடுதி, வகுப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் வாடகை கட்டிடம் பிடிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த மார்ச் 4-ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தனியார் கட்டுமான நிறுவனமான L&T நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தினை சமன் செய்து வாஸ்து பூஜை தொடங்கியுள்ளது.

அதனைத்தொடர்ந்து ஓரிரு வாரங்களில் கட்டுமான பணிக்கான பூஜை தொடங்கும் என்றும், அதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. 950 படுக்கைளுடன், பத்து தளங்களுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இந்நிலையில், கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளதாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; கடந்த மார்ச் மாதத்தில் நடந்த பணிகள் என்ன என்பது குறித்தும் புகைப்படங்களுடன் மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் பதிவிட்டுள்ளது.

அதில்; முதற்கட்டமாக ரூ.10 கோடி மதிப்பீட்டில், 5 கி.மீ. சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் ரூ.21 கோடியில், 6 கிலோ மீட்டருக்கு சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது. மருத்துவமனை கட்டுமானப் பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் தொடங்கியுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.

The post மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தீவிரம்: புகைப்படம் வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்! appeared first on Dinakaran.

Tags : Madurai AIIMS ,Madurai ,Madurai AIIMS Hospital ,Modi ,AIIMS Hospital ,Madurai Topur ,Japan National Jaika Financial Institution ,Dinakaran ,
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில்...