அரியலூர்: ஜூன் 4க்குப் பிறகு யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள் முடிவுசெய்வார்கள் என அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். இந்தத் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் தினகரன் பின்னால் அணிவகுத்து நிற்பார்கள். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு இது நடக்கத்தான் போகிறது. இதை ஓபனாகவே சொல்வேன். இதைச் சொல்ல தயக்கமோ, பயமோ எனக்கு கிடையாது” என்றும் தேனியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.
இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; அதிமுக காணாமல் போய்விடும் என்று சிலர் சொல்கிறார்கள். யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு தெரியும். அதிமுக தெய்வ சக்தி உள்ள கட்சி. அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். அதிமுகவை சீண்டிப் பார்க்காதீர்கள். அப்படிப் பார்த்தால் என்ன ஆகும் என்பதை தொண்டர்கள் காட்டுவார்கள்.
இந்தியாவிலேயே அதிக தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுகதான். உழைப்பை நம்பி இருக்கும் கட்சி அதிமுக; எந்த பூச்சாண்டிக்கும் அதிமுக அஞ்சாது. 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சியை மிரட்டிப் பார்க்கிறார்கள். இந்த வேலையெல்லாம் இங்கே எடுபடாது என்று கூறினார்.
The post ஜூன் 4க்குப் பிறகு யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள் முடிவுசெய்வார்கள்: அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி appeared first on Dinakaran.