×

மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது

*மேட்டுப்பாளையத்தில் ஆ.ராசா பேச்சு

மேட்டுப்பாளையம் : இந்தியாவில் மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது என மேட்டுப்பாளையம் பிரசார கூட்டத்தில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா பேசினார்.
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், தற்போதைய நீலகிரி எம்பியுமான ஆ.ராசா சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட அண்ணாஜி ராவ் ரோடு, எம்.எஸ்.ஆர்.புரம், ஓடந்துறை, பெரிய பள்ளிவாசல் ரோடு, எம்ஆர்டி நகர், சங்கர் நகர், கெண்டையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா பரப்புரை மேற்கொண்டார்.

பிரசாரத்தின்போது ஆ.ராசா பேசியதாவது: இன்றைக்கு இந்தியா மிகப்பெரிய பேராபத்தில் இருக்கிறது. குரங்கு கையில் பூமாலையை கொடுத்ததுபோல், மோடி கையில் ஆட்சியை கொடுத்துவிட்டு, கடந்த 10 ஆண்டுகளாக நாடு சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறது. அவர் சொன்ன வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. நான் ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் அனைத்து மக்களின் வங்கி கணக்கில் போடுவேன்என்றார். கருப்பு பணத்தை மீட்கவும் இல்லை. ரூ.15 லட்சமும் தந்தபாடில்லை.

மேலும், ஆட்சிக்கு வந்தால், ஆண்டொன்றிற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன், என்றார். அதுவும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு உற்பத்தியை தருவேன். நாட்டில் உள்ள நதிகள் அனைத்தையும் இணைப்பேன் என்றார். இது எதனையும் செய்யவில்லை. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் மாநில முதல்வர் சிபுசோரன் ஜெயிலில் இருக்கின்றனர். ஜனநாயகம் இருக்கிறதா? இல்லையா? என வெளிநாட்டவர்கள் எல்லாம் தற்போது நம் நாட்டை பார்த்து கிண்டல் அடிக்கின்றனர்.

அதையெல்லாம் விட கொடுமை ஐநா சபையே நம் நாட்டை பார்த்தும், மோடியின் ஆட்சியை பார்த்தும் சிரிக்கிறது. இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் எல்லாம் ஜெயிலில் இருக்கிறார்களே என்ன காரணம்? என்று. இந்த நாட்டில் இந்து, முஸ்லிம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எல்லா மொழி பேசுபவர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்டது தான் அரசியல் சட்டம். மோடி ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது.

அரசியல் சட்டம் இல்லை என்றால் மதச்சார்பின்மை இருக்காது. மதச்சார்பின்மை இல்லை என்றால் மத நல்லிணக்கம் இருக்காது. ஒருவர் இன்னொருவரை அடித்துக் கொள்ள வேண்டியதுதான். இப்படி மத மோதலை தூண்டிவிட்டு, மத நல்லிணக்கத்தை கெடுத்து, மத வெறியை தூண்டி, ஊழலிலே திளைத்துக் கொண்டிருக்கிற இந்த ஆட்சியை யார் விமர்சித்தாலும் ஜெயிலுக்கு அனுப்பி விடுகிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு வருவதே இல்லை. தமிழ்நாட்டை மதிப்பதே இல்லை. தூத்துக்குடி மூழ்கிவிட்டது. திருநெல்வேலி மூழ்கிவிட்டது. ரூ.37 ஆயிரம் கோடி நமக்கு நஷ்டம். அந்த ரூ.37 ஆயிரம் கோடியை எங்களுக்கு கொடுங்கள், உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்று கேட்டதற்கு, இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

13 பேரை சுட்டுக் கொன்றார்கள் எடப்பாடி ஆட்சி காலத்தில். அப்போது, அவர் தான் பிரதமர். ஆனால், வரவில்லை. தமிழ்நாட்டிற்கு ஆபத்து என்றால் எப்போதுமே வராத இந்த பிரதமர், இந்தியை மட்டுமே திணிக்கும் இந்த பிரதமர், தமிழை விரும்பாத இந்த பிரதமர், இப்போது மட்டும் பல்லடத்துக்கு வருகிறார். மேட்டுப்பாளையத்துக்கு வருகிறார்.

பெரம்பலூருக்கு வருகிறார். திருச்சிக்கு வருகிறார். எதற்கு வருகிறார் என்றே தெரியவில்லை. தமிழ்நாட்டைப் புறக்கணிக்கின்ற, மதவாத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற, இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற முதல்வர் நம்முடைய முதலமைச்சர் முத்துவல் கருணாநிதி ஸ்டாலின் மூன்றாண்டு கால ஆட்சியில் செய்துள்ள சாதனைகளை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். கொரோனா காலத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.4000 வீதம் வழங்கினார்.

அதற்குப் பின்னர் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் மகளிர் உரிமைத் தொகையையும் வழங்கிக் கொண்டிருப்பது நமது முதல்வரின் தனி சிறப்பாகும். அனைத்து அரசு ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி, உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு தலா ரூ.1000, மகளிருக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். ஸ்டாலின் குரல் உங்களை அழைக்கிறது என்று சொல்லுகிறாரே? அந்த குரலுக்கு மதிப்பளித்து என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள், என்றார்.

இந்த பரப்புரையின்போது திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி, முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் நவீன், நகர செயலாளர்கள் முகமது யூனூஸ், முனுசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

The post மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது appeared first on Dinakaran.

Tags : UN ,Modi ,A.Rasa ,Mettupalayam Mettupalayam ,DMK ,Nilgiri ,Mettupalayam ,India ,Nilgiris ,UN Council ,Dinakaran ,
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...