×
Saravana Stores

மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் மதுரையில் துவங்கியது சித்திரை திருவிழா

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்றுகாலை துவங்கியது. 21ம் தேதி திருக்கல்யாணமும், 22ம் தேதி தேரோட்முடம் நடைபெறுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்றுகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 9.56 மணிக்கு மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, சிறப்பு பூஜை, தீர்த்தம் தெளித்து, தீபாராதனை நடந்தது.

முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி, பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் சுவாமி சன்னதியின் முன் உள்ள கொடிமரம் முன்பு எழுந்தருளினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், தக்கார் ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவலர்கள் செல்லையா, டாக்டர் சீனிவாசன், மீனா, சுப்புலட்சுமி, கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், இந்துசமய அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை, கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் பேஸ்கார்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழா நடக்கும் 12 நாட்களும் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் காலை, இரவு என இருவேளைகளில் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். முக்கிய நிகழ்ச்சியாக 21ம் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பிலுள்ள திருமண மண்டபத்தில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்று இரவு மீனாட்சியம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். 22ம் தேதி மாசி வீதிகளில் சுவாமி, அம்பாள் திருத்தேரோட்டம் நடைபெறும்.

23ம் தேதி சித்திரை திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. இதற்கிடையே, அழகர்கோவில் மலையில் இருந்து அழகர் 21ம் தேதி புறப்படுகிறார். 22ம் தேதி மூன்றுமாவடியில் அழகர் எதிர் சேவை நடக்கிறது. 23ம் தேதி அதிகாலை 5.55 மணி முதல் 6.15 மணிக்குள் அழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடக்கிறது. சித்திரை திருவிழாவையொட்டி, இந்த வருடம் மாசி வீதிகள் முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில் சார்பில் 600 உயர் ரக மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கோயில் கோபுரங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன.

* கொடியேற்றமும்… மழையும்….
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றம் நடக்கும் போது மதுரையில் மழை பெய்யும் என்பது ஐதீகம். அது போன்று நேற்று காலையில் வெயில் அதிகரித்த நிலையில் பகலில் திடீரென மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 20 நிமிடம் நல்ல மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ச்சி ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் ஓடியது. பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

The post மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் மதுரையில் துவங்கியது சித்திரை திருவிழா appeared first on Dinakaran.

Tags : Chitra festival ,Madura ,Meenakshi Amman Temple ,Madurai: ,Madurai Meenakiyamman Temple Chitrai Festival ,Thirukkalyanana ,Terotmum ,Swami ,Mithuna Lucknow ,Chitra ,Meenakari Amman Temple ,
× RELATED கோயில் அருகே வசிப்போர் பட்டாசு...