×

அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை நடமாட்டம்: சிசிடிவி காட்சி வைரல்

அரியலூர்: மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ம் தேதி நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர். சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு, ஊருகுடி, மறையூர், மயிலாடுதுறை ரயிலடியில் 30 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

பழூர், ஊருகுடி, ரயிலடி உள்ளிட்ட பகுதிகளில் 9 கூண்டுகள், குத்தாலம் காஞ்சிவாய் உள்ளிட்ட பகுதிகளில் 7 கூண்டுகள் வைக்கப்பட்டும் சிறுத்தை சிக்கவில்லை. 89 கேமராக்கள் பொருத்தப்பட்டன. நேற்றுடன் 10 நாட்களாக அப்பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் இரவு சாலையை கடந்து கம்பி வேலியை சிறுத்தை தாண்டி செல்வதை கண்ட பொதுமக்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு, அவர்கள் தெர்மல் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தை இருக்கும் இடத்தை கண்காணித்து வருகின்றனர். மாவட்ட வனத்துறை அலுவலர் இளங்கோவன் தலைமையில் 25 பேர் செந்துறை பகுதியில் சிறுத்தை தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை நடமாட்டம்: சிசிடிவி காட்சி வைரல் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Semmankulam ,Mayiladuthurai ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...