×

உலகத்தில் எந்த சக்தியாலும் தமிழர்களை தொட்டுப் பார்க்க முடியாது: நெல்லையில் ராகுல் காந்தி ஆவேச பேச்சு

நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடந்த இந்தியா கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்பி, நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட்புரூஸ், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை கத்பர்ட் உள்ளிட்ட 8 மக்களவைத் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது: நான் தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு முறை வரும் போதும் தமிழ்நாட்டு மக்களை நெஞ்சம் நிறைந்த அன்போடு நேசிக்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் பண்பாடு, வரலாறு, கலாசாரம், மொழி என்னை மிகவும் ஈர்த்துள்ளது. எனக்கு தமிழ் தெரியாது என்றாலும், தமிழ்நாட்டின் கலாசாரம், தொன்மையான பண்பாடு, அற்புதமான கவிஞர்கள், அவர்களுடைய சிந்தனைகள் என இந்தியாவை பிரதிபலிக்கிற அற்புதமான கண்ணாடியாக தமிழ்நாட்டை நான் பார்க்கிறேன். பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற மிகப் பெரிய ஆளுமைகளை தமிழ்நாடு இந்த மண்ணுக்கு தந்துள்ளது.

இந்த கூட்டத்தின் முழுமையுமே நான் பெரியார், அண்ணா, கலைஞரை பற்றி பேசிக் கொண்டிருக்க முடியும். சமூக நீதியின் பாதையை இந்த நாட்டுக்கே தமிழ்நாட்டு மக்கள் தான் தெரியபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே தான் நான் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழ்நாட்டில் இருந்து துவங்கினேன். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4 ஆயிரம் கிமீ தூரம் நடந்து இந்த மாபெரும் தத்துவங்களை மண்ணின் மக்களுக்கு சொல்வதற்காக நடந்தோம்.
இந்தியாவில் இந்த ஒரு மாநிலத்தில் இருந்து தான் எல்லோரும் நிறைய செய்திகளையும், பண்பாட்டு தரவுகளையும் படிக்க முடியும். இதுபோன்ற அருமையான உறவை நான் எங்கும் பார்த்தது இல்லை.

தமிழ்நாட்டு மக்கள் மீது கொண்டுள்ள உறவு அரசியல் உறவல்ல, குடும்ப உறவு. இந்தியாவிலே ஒரு பெரிய தத்துவ போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு புறம் தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் போதித்த சமூக நீதி, சமத்துவம், விடுதலை, மறுபுறம் நரேந்திர மோடி போன்றவர்களின் ஆர்எஸ்எஸ் சித்தாந்தமும், வெறுப்பும், துவஷேமும். நரேந்திர மோடி ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என்கிறார். இந்தியாவில் இருக்கும் எந்த மொழியையும் விட தமிழ் மொழி எந்த விதத்திலும் குறைந்த மொழியல்ல. இந்த நாட்டில் பல்வேறு மொழிகள், பண்பாடுகள், கலாசாரங்கள் இருக்கின்றன. ஒரு பண்பாடு, மொழி, கலாசாரத்ததை விட மற்றொரு மொழி, பண்பாடு, கலாசாரம் எந்த வகையிலும் தாழ்ந்தது அல்ல.

தமிழ் மொழிக்கு தொடுக்கப்படும் எந்த தாக்குதலும் தமிழ்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே நான் பார்க்கிறேன். என்னை பொறுத்தவரை மொழி, கலாசாரம், பண்பாடு மிகவும் முக்கியம். தமிழ் மொழி, வங்க மொழி, பேசப்படும் பல்வேறு மொழிகள் இல்லாமல் இந்தியா என்ற ஒரு நாடே இருக்க முடியாது. மக்களவைத் தேர்தல் ஒரு மாபெரும் தத்துவ போராட்டம். நரேந்திர மோடி மட்டுமல்ல, இந்த உலகத்தில் எந்த சக்தியாலும் தமிழர்களையோ, தமிழ் மொழியையோ, தமிழ் கலாசாரத்தையோ தொட்டுப் பார்க்க முடியாது என எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த தத்துவப் போர், இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அரசியல் சாசன சட்டத்தை பாதுகாக்கவும் மேற்கொண்டுள்ள யுத்தம். இந்தப் போரில் நாம் வெற்றி பெறப் போகிறோம் என நான் உறுதியாகச் சொல்கிறேன். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

* சிறுமிக்கு சாக்லேட் கொடுத்த ராகுல்
பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ராகுல் காந்தி, பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் உள்ள ஹெலிபேடுக்கு வந்தார். அப்போது ஹெலிபேடு அருகே குழந்தைகள் நின்று கொண்டு உற்சாகமாக அவரை நோக்கி கையசைத்தனர். அப்போது காரில் இருந்து இறங்கிய ராகுல், குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் கைகுலுக்கினார். அப்போது கொக்கிரகுளத்தை சேர்ந்த 3ம் வகுப்பு மாணவி மேகா(8) ராகுலை முகமலர்ச்சியோடு வரவேற்றார். இதையடுத்து கையில் இருந்த சாக்லேட்டை ராகுல்காந்தி, அந்த சிறுமியிடம் கொடுத்தார். அச்சிறுமியும் வாஞ்சையோடு அதை பெற்றுக் கொண்டார். பின்னர் சிறுமி கூறுகையில், ‘‘ராகுல் காந்தியை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இங்கு வந்தேன். அவர் எனக்கு சாக்லேட்டை பரிசாக அளித்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் பிரதமராக வரவேண்டும் என்பது ஆசையாகும்’’ என்றார்.

* ‘நாட்டில் 83% இளைஞர்களுக்கு வேலை இல்லை’
ராகுல்காந்தி பேசுகையில், ‘இந்த நாட்டிலே இருக்கிற 83 சதவீதம் இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தை சந்தித்துள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை விட இந்தியா சமச்சீரற்ற இந்தியாவாக உள்ளது. இந்த நாட்டிலே 25 பெரிய பணக்காரர்கள் 70 சதவீதம் செல்வத்தை தங்கள் கைவசம் வைத்துள்ளளர். ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் நாட்டின் பிரதமர் அவர்களது கடன்களை தள்ளுபடி செய்யத் தயாராக இல்லை. ஆனால் பணக்காரர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார்.

இந்த நாட்டில் இருக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அனைத்தும் ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சீரழிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஒன்றிய அரசில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களை இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் நிரப்புவோம். வேலை கிடைப்பதற்கு முன்பு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் ஒரு திட்டத்தை உருவாக்கி வைத்துள்ளோம்.

6 மாதங்கள், 1 வருடம் தனியார் நிறுவனத்தில் பயிற்சி அளித்து அதற்கு பிறகு நல்ல வேலை கிடைக்க ஏற்பாடு செய்வோம். தகுதியுள்ள ஒவ்வொரு இளைஞரும் இந்தியாவில் இருக்கும் தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசில் பணியாற்றும் நிலையை உருவாக்கி ஓராண்டு பயிற்சி பெறும் காலத்தில் அரசு ரூ.1 லட்சம் வழங்குவோம். அவர்கள் சிறப்பாக தேர்ச்சி பெற்றால் அங்கேயே பணியமர்த்தப்படுவர். இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்’ என்றார்.

The post உலகத்தில் எந்த சக்தியாலும் தமிழர்களை தொட்டுப் பார்க்க முடியாது: நெல்லையில் ராகுல் காந்தி ஆவேச பேச்சு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,DMK ,Kanimozhi ,Tuticorin Constituency ,Congress ,Robert Bruce ,Nellai ,Vijay Vasanth Congress ,Kanyakumari ,Vilavankodu Assembly Constituency ,India Alliance ,Nellai Balayankottai Bell Maidan ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...