×

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தமுள்ள 6.23 கோடி வாக்காளர்களில் 4.36 கோடி வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. இது 70 சதவீதம். மீதமுள்ளவர்களுக்கு இன்றைக்குள் தேர்தல் அலுவலர்கள் பூத் சிலிப் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கும் விரைவு தபால் மூலம் புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இன்னும் 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதுவும் 18ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு விடும். சி-விஜில் ஆப் மூலம் இதுவரை 3,605 புகார்கள் வந்துள்ளது. இதில் 32 புகார்கள் மீது மட்டுமே இன்னும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் கைப்பற்றியுள்ள ரூ.305 கோடியில் வருமான வரித்துறையினர் மட்டும் ரூ.74.15 கோடி பணம் பறிமுதல் செய்துள்ளனர். பறக்கும் படையினர் ரூ.70.29 கோடி ரொக்கம் பிடித்துள்ளனர்.

திருப்பூர் கோழிப்பண்ணையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.34 கோடி கைப்பற்றியுள்ளதாக கிடைத்த தகவல்கள் குறித்த அறிக்கை இன்னும் எனக்கு வரவில்லை. அதேபோன்று நீலகிரி தொகுதி வேட்பாளர் ஒருவருக்கு சாதகமாக தேர்தல் அதிகாரிகள் செயல்படுகிறார் என்ற செய்தி பத்திரிகையில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். இதுபற்றி அந்த மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் தொகுதியில் பிரசாரம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவதூறாக பேசியதாக இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது. இதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பாக வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மின்சார வசதி உள்ளது. வீல் சேர் மற்றும் அதை இயக்க தன்னார்வ தொண்டர்கள் ஈடுபடுவார்கள். நாளை (14ம் தேதி) அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டு, அவர்களுக்கு ஒதுக்கும் நேரங்களில் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்கப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பயனாளர்களுக்கு வழங்குவது உள்ளிட்ட ஏற்கனவே அறிவித்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த எந்த தடையும் இல்லை. அதே நேரம் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் புதிதாக எந்த திட்டங்களையும் அறிவிக்க கூடாது. பே-டிஎம்.ல் பணம் அனுப்ப முயற்சி செய்தால் பிரதமர் மோடி பற்றிய விளம்பரம் வெளியாவதாக புகார் கூறுகிறீர்கள். இதுபற்றி விசாரிக்கப்படும்.

* தபால் வாக்கில் புதிய நடைமுறை
நாடாளுமன்ற தேர்தலில் தபால் வாக்குகளை கையாளுவது குறித்து புதிய நடைமுறையை பின்பற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் தபால் வாக்களிப்பார்கள். வெளிமாவட்டத்தில் உள்ளவர்கள் கூட அடுத்த மாவட்டங்களில் பணியாற்றும்போது அந்த மாவட்டங்களில் தபால் வாக்களிப்பார்கள். இந்த தபால் வாக்குகள் அனைத்தும் மாநிலத்தின் மைய பகுதியான திருச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் தனித்தனி பாக்ஸ் வைக்கப்பட்டு இருக்கும். மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் அந்தந்த தொகுதி பாக்சில் போடுவார்கள். பின்னர் அந்த 39 பெட்டிகளும் அந்தந்த தொகுதிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் வரும் 17ம் தேதிக்குள் முடிவடையும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

* காவி கலரில் அழியாத மை பாட்டில்
ஒவ்வொரு வாக்காளரும் வாக்களித்த பிறகு இடது கை ஆள்காட்டி விரலில் நீல கலரில் அழியாத மை வைக்கப்படும். வழக்கமாக இந்த மை பாட்டில், பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில் உள்பக்கத்தில் உள்ள மை தெரியும்படி தான் இருக்கும். ஆனால் இந்த தேர்தலில், ஆரஞ்சு (காவி) கலரில் உள்ள டப்பாவில் அழியாத நீல கலர் மை அடைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, அதுபற்றி பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கிண்டலாக கூறும்போது, ”இதுதான் ஒரே நாடு ஒரே மை” என்றனர்.

* மைக் சின்னத்தில் மாற்றம் செய்ய முடியாது
நாம் தமிழர் கட்சியினர் கூறிய மைக் சின்னம் வழங்காமல், வேறு ஒரு மைக் சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு என்னென்ன சின்னம் வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புத்தகத்தில் படம் தெளிவாக உள்ளது. அதில் உள்ள மைக் சின்னம் தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் அளித்த கடிதம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஒட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளதால் இனி அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என சத்யபிரதா சாகு கூறினார்.

The post தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,Tamil Nadu ,Chennai ,Chief Electoral Officer of ,Tamil ,Nadu ,Head of ,Chief Secretariat ,Chief Election Officer ,Dinakaran ,
× RELATED மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை...