×

கோவையில் விதியை மீறி அண்ணாமலை பிரசாரம் தட்டிக்கேட்ட திமுகவினர் மீது பாஜவினர் தாக்குதல்: 7 பேர் காயம்

கோவை: கோவையில் விதியை மீறி அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட திமுகவினர் மீது பாஜவினர் தாக்குதல் நடத்தினர். கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் அண்ணாமலை, ஆவாரம்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10.45 வரை தேர்தல் விதிமுறை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக பாஜவினரும் பிரசாரம் செய்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் முறையிட்டனர்.

அந்த சமயத்தில், பாஜ.வினர் திடீரென திமுகவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், திமுக மற்றும் இந்தியா கூட்டணியை சேர்ந்த ஜோதிபாசு, மோகன்ராஜு, குணசேகரன், செல்லப்பா, சேகர், சதீஷ், மற்றும் ரங்கநாதன் ஆகிய 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர். இதுபற்றி திமுகவினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், பாஜவை சேர்ந்த ஆனந்தன், மாசாணி, லட்சுமி செந்தில், ரங்கநாதன் ஆகிய 4 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 294பி, 323, 147 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

இந்த தாக்குதல் விவகாரம் குறித்து கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கூறியதாவது: எப்படி மதவெறியை தூண்டிவிட்டு இந்தியாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என நினைக்கிறார்களோ, அதேபோல் கோவையில் பாஜவினர் தேர்தல் சட்ட விதிகளை மீறி செயல்படுகின்றனர். கோவை மாநகராட்சி 28வது வார்டுக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை தேர்தல் விதிமீறி இரவு 10.45 மணி வரை பிரசாரம் செய்துள்ளார். இந்த வாரத்தில் பல இடங்களில் இதுபோல் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்துள்ளார்.

இதை அறிந்த திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சுமார் 7 பேர் அங்கு திரண்டுள்ளனர். சட்டவிதிகளுக்கு புறம்பாக பிரசாரம் செய்வது தவறு என சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், அவர்கள், திமுகவினர் மீது அத்துமீறி கை வைத்துள்ளனர். இது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தலில் போட்டியிடுகிறபோதே இந்த அராஜகம் என்றால், நாளை என்ன செய்வார்கள்? என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.

அண்ணாமலை என்கிற வேட்பாளர், பாசிச வெறியோடு, சட்டத்தை மதிக்காமல், மதவெறியை தூண்டிவிட்டு, ஆணவத்துடன் இங்கு நடந்துள்ளார். அவரது அதிகார திமிரை இங்கு காட்டியுள்ளார். தேர்தல் விதியை மிறிய அவர் மீதும், தாக்குதலில் ஈடுபட்ட அவரது கட்சியினர் மீதும் காவல்துறையும், இந்திய தேர்தல் ஆணையமும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நா.கார்த்திக் கூறினார்.

பாஜவினரின் தாக்குதலில் காயம் அடைந்த 28வது வார்டு திமுக செயலாளர் மோகன்ராஜ், கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர்குழு உறுப்பினர் ஜோதிபாசு ஆகியோர கூறுகையில், ‘பாஜவினர் சுமார் 20 பேர் எங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். அந்த சமயத்தில் அண்ணாமலை, பிரசார வாகனத்தைவிட்டு இறங்கி, வேறு காரில் சென்றுவிட்டார். எதுவும் நடக்காததுபோல் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். பாஜவினரின் இந்த தாக்குதலுக்கு அண்ணாமலைதான் முழு காரணம். அவர் மீது இந்திய தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post கோவையில் விதியை மீறி அண்ணாமலை பிரசாரம் தட்டிக்கேட்ட திமுகவினர் மீது பாஜவினர் தாக்குதல்: 7 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : BJP ,DMK ,Annamalai ,Coimbatore ,Avarampalayam ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...