புதுடெல்லி: வாரிசு அரசியலுக்கு எதிராக பாஜக பிரசாரம் செய்து வரும் நிலையில், பல மாநிலங்களில் அரசியல் வாரிசுகளுக்கு சீட் வழங்கி போட்டியிட வைத்துள்ளது அம்பலமாகி உள்ளது. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் முதல் தாங்கள் வாரிசு அரசியலை எதிர்ப்பதாக பாஜக பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் பாஜகவின் பல தலைவர்களின் வாரிசுகள் இந்த லோக்சபா தேர்தல் களத்தில் களம் இறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கர்நாடகாவில் தனது மகன் கே.இ.காந்தேஷுக்கு சீட் மறுக்கப்பட்டதால் மனமுடைந்த கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் மகனும் சிட்டிங் எம்பியுமான பி.ஒய்.ராகவேந்திராவை எதிர்த்து, சிவமொக்கா தொகுதியில் ஈஸ்வரப்பா போட்டியிடுவதால் மாநில பாஜக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகனான முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, ஹாவேரி-கடக் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
* பீகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் இரு மகன்கள் எம்எல்ஏக்களாகவும், ஒரு மகள் எம்பியாகவும் இருக்கும் நிலையில், இந்த தேர்தலில் இரு மகள்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆனால் பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் பீகார் வரும் போது, லாலு குடும்பத்தின் வாரிசு அரசியல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் முன்னாள் ஒன்றிய அமைச்சரும் லோக்சக்தி தலைவருமாக இருந்த மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகனான சிராக் பஸ்வானை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். மோடியின் போலி வாரிசு அரசியல் விமர்சனங்கள் குறித்து லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் கிண்டலடித்து விமர்சனம் செய்துள்
ளார்.
* மத்திய பிரதேசத்தில் குவாலியர் அரச குடும்பத்தை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, குணா தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இவரது தந்தை மாதவராவ் சிந்தியா, ஒன்பது முறை எம்பியாக இருந்தவர். அவர் பாரதிய ஜனசங்கம், காங்கிரஸ், சுயேச்சையாக கூட போட்டியிட்டு குணா தொகுதியில் தோல்வி அடையவில்லை. ஜோதிராதித்யாவின் பாட்டியும், எட்டு முறை எம்பியாக இருந்தவர் ஆவார். அவரும் குணா தொகுதியில் தோல்வி அடையவில்லை. ஜோதிராதித்ய சிந்தியாவின் குடும்ப உறவுகள் பட்டியலில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேச முன்னாள் அமைச்சர் யசோதரா ராஜே சிந்தியா உள்ளிட்டோர் அரசியல் களத்தில் உள்ளனர். மேலும் யசோதராவின் சகோதரி பத்மாவதி, திரிபுராவின் மகாராஜா மற்றும் மூன்று முறை திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதி எம்பியாக இருந்த கிரித் பிக்ரம் கிஷோர் தேப் பர்மனை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
* குவாலியரின் சிந்தியாக்களின் ஆதிக்கம் மத்திய பிரதேசத்தின் மேற்கு மாநிலமான ராஜஸ்தான் வரை நீண்டுள்ளது. மாநில அரசியலை வசுந்தரா ராஜே கவனித்து வந்தாலும், அவரது மகனான துஷ்யந்த் சிங் ஜலவர்-பரான் மக்களவைத் தொகுதியில் இருந்து நான்கு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
* பீகாரில் மட்டும் நான்கு குடும்பங்களை சேர்ந்த 7 வேட்பாளர்களை பாஜக களம் இறக்கியுள்ளது. மூன்று முறை லோக்சபா எம்பியாக இருந்தவரும், பாஜக இணை நிறுவனருமான மதன் பிரசாத் ஜெய்ஸ்வாலின் மகனான சஞ்சய் ஜெய்ஸ்வால், வாஜ்பாய் அரசில் ஒன்றிய அமைச்சராக இருந்த சந்திரேஷ்வர் பிரசாத் தாக்கூரின் மகன் விவேக் தாக்கூர், முன்னாள் ஒன்றிய அமைச்சரான ஹுகும்தேவ் நாராயண் யாதவின் மகனான அசோக் குமார் யாதவ், முன்னாள் எம்பியாக இருந்த ராம்நரேஷ் சிங்கின் மகன் சுஷில் குமார் சிங் ஆகியோரின் பெயர்கள் நீள்கின்றன.
* பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் வாரிசு அரசியலுக்கு பஞ்சமில்லை. அந்தவகையில் 6 முறை எம்எல்ஏவாகவும், இரண்டு முறை ஜாம்நகர் மேயராகவும் இருந்த ஹேமந்த்தின் மகள் முன்னாள் எம்எல்ஏ பூனம், 6 முறை கெராலு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஷங்கர்ஜி தாகூரின் மகன் பாரத்சிங் தாபி ஆகியோருக்கு இந்த தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டுள்
ளது.
* ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் என்.டி.ராமராவ் மகள் டி.புரந்தேஸ்வரி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் அமரநாத் ரெட்டியின் மகனும், ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் குமார் ரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். தெலங்கானாவின் மகபூப்நகரில், டி.கே.அருணா போட்டியிடுகிறார்.
* புதுடெல்லியில் மக்களவை தொகுதி வேட்பாளராக மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ் போட்டியிடுகிறார். இதுதவிர பல மாநிலங்களில் கட்சியின் மூத்த தலைவர்களின் மகன்கள், மகள்கள் எம்எல்ஏக்களாகவும், மாநில அமைச்சர்களாகவும் பதவி வகித்து வருகின்றனர். இவ்வாறாக வாரிசு அரசியல் குறித்து பாஜக, பல மாநிலங்களில் தங்களது கட்சியை சேர்ந்தவர்களின் வாரிசுகளுக்கும், பிற கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவியவர்களின் வாரிசுகளுக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு கொடுத்துள்ளது. எனவே பாஜகவின் வாரிசு அரசியல் பிரசாரம் எல்லாம் பொய்யானது என்பது அம்பலமாகி உள்ளது.
The post பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல் பிரசாரம்; பல மாநிலங்களில் வாரிசுகளுக்கு ‘சீட்’ வழங்கி தாராளம்.! மோடி, அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்திலும் அமல் appeared first on Dinakaran.