×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை நடந்த வாகன சோதனையில் ரூ.26 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல்: மாவட்ட தேர்தல் அலுவலர் சரயு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை நடந்த வாகன சோதனையின் போது, ரூ.26 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்க நகைகளை பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் மாதம் 13ம் தேதியன்று பிற்பகல் முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு அமுலில் உள்ளது. அதன்படி, மாவட்டம் முழுவதும் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 66 பறக்கும்படை குழுக்களும், 54 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநில எல்லைகளை ஒட்டி உள்ள சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் அனைத்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பறக்கும் படைகுழுக்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைதை ஒட்டி ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தையட்டி 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆந்திர மாநில எல்லை ஒட்டி உள்ள அந்திகுண்டாவெளி, கர்நாடகா மாநில எல்லையையட்டி உள்ள நேரலகிரி, ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிப்காட், ஜூஜூவாடி, மத்திகிரி, கொத்தகொண்டப்பள்ளி, டி.வி.எஸ்., பூனப்பள்ளி, கர்னூர், பாகலூர், கக்கனூர், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆந்திர மாநில எல்லையான வரமலைகுண்டா, குருவிநாயனப்பள்ளி, தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கர்நாடகா மாநில எல்லையான கும்மளாபுரம் மற்றும் கெம்பட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 15 சோதனை சாவடிகளில் வாகனங்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு கடந்த மாதம் 13ம் தேதி பிற்பகல் முதல் நேற்று வரை நடத்தப்பட்ட தீவிர வாகன சோதனையில் ரூ.26 கோடியே 35 லட்சத்து 31 ஆயிரத்து 791 மதிப்பிலான ரொக்க பணம், தங்க நகைகளை பறக்கும் படையினர் மற்றும் நி¬யான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்படி, ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் நடந்த சோதனையில், ரூ.16 லட்சத்த 7 ஆயிரத்து 940ம், பர்கூர் தொகுதியில் ரூ.76 லட்சத்து 33 ஆயிரத்து 120, கிருஷ்ணகிரி தொகுதியில் ரூ.1 கோடியே 71 லட்சத்து 5 ஆயிரத்து 590ம், வேப்பனஹள்ளி தொகுதியில் ரூ.46 லட்சத்து 13, 190ம், ஓசூர் தொகுதியில் ரூ.1 கோடியே 8 லட்சத்து 57 ஆயிரத்து 260ம், தளி தொகுதியில் ரூ.49 லட்சத்து 11, 670ம் என மொத்தம் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4 கோடியே 67 லட்சத்து 90 ஆயிரத்து 770 பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் ரூ.5 கோடியே 88 லட்சத்து14 ஆயிரத்து 214 மதிப்பிலான தங்க நகைகள், ஓசூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.15 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரத்து 176 மதிப்பிலான தங்க நகைளும் என மொத்தம் ரூ.21 கோடியே 32 லட்சத்து 73 ஆயிரத்து 390 மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்படி, நேற்று காலை வரை மாவட்டத்தில் ரூ.26 கோடியே 64 ஆயிரத்து 160 மதிப்பிலான ரொக்க பணம் மற்றும் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, உரிய துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், பறிமுதல் செய்யப்படும் ரொக்க பணம் மற்றும் நகைகளின் மதிப்பு அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை நடந்த வாகன சோதனையில் ரூ.26 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல்: மாவட்ட தேர்தல் அலுவலர் சரயு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri district ,District Election Officer ,Sarayu ,Krishnagiri ,Flying Squad ,Standing Vigilance Team ,Election Commission of India ,Krishnagiri Parliamentary Public ,Dinakaran ,
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...