×

ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை.. ஒரே நாடு, ஒரே தலைவர் என்பதில் குறிக்கோளாக உள்ளனர் : நெல்லையில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை!!

நெல்லை : I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல் வாக்கு சேகரித்தார். ராகுல் காந்தியின் ஆங்கில உரையை பீட்டர் அல்போன்ஸ் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தார். பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, அன்பு இவையெல்லாம் என்னை ஈர்த்தவை. எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள விரும்புகிறேனோ, அப்போது எல்லாம் தமிழ்நாட்டைப் பார்க்கிறேன். தமிழ்நாடு இந்தியாவை பிரதிபலிக்கும் அற்புத கண்ணாடியாக உள்ளது. பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் என பல தலைவர்களை தமிழ்நாட்டு மக்களான நீங்கள் தந்திருக்கிறீர்கள்.இந்த கூட்டத்தின் முழு நேரத்திலும் அவர்களைப் பற்றி பேச முடியும். சமூக நீதியின் பாதையில் எப்படி நடப்பது என்பதை இந்த நாட்டுகே தமிழ்நாட்டு மக்கள்தான் தெரியப்படுத்தியுள்ளீர்கள். இதனால்தான், இந்திய ஒற்றுமை பயணத்தை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன்.

இந்தியாவிலேயே இந்த ஒரு மாநிலத்தில் இருந்துதான் பண்பாட்டு தரவுகளை எல்லோரும் படிக்க முடியும். நான் இங்கு வரும்போதெல்லாம் மக்கள் அன்பை பொழிந்திருக்கிறார்கள். இது ஒரு அரசியல் உறவல்ல, குடும்ப உறவு. இந்தியாவில் தற்போது பெரும் சித்தாந்த போர் நடக்கிறது. ஒரு பக்கம் பெரியார் போதித்த சமூக நீதி, சமத்துவம், விடுதலை இருக்கிறது. மற்றொரு பக்கம் மோடியைப் போன்றவர்கள் கொண்டாடும் வெறுப்பும், துவேசமும் இருக்கிறது. மோடி சொல்லும் ஒரே நாடு, ஒரே மொழி, என சொல்கிறார். இந்தியாவில் உள்ள பிற மொழிகளை விட தமிழ் எந்த வகையிலும் குறைந்தது இல்லை. இந்தியாவில் பல்வேறு கலாசாரங்கள் உள்ளன. ஒன்றைவிட மற்றொன்று எந்த விதத்திலும் தாழ்ந்தது அல்ல.தமிழ் வெறும் மொழியல்ல, அது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது. தமிழ் மீது தொடுக்கப்படும் தாக்குதலை, தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே பார்க்கிறேன்.

தமிழ், வங்காளம் போன்ற நாட்டில் பேசப்படும் மொழிகள் இல்லாமல் இந்தியா இருக்க முடியாது. நாட்டின் எல்லா மொழிகளும் புனிதமானது என கருதுகிறோம். ஆனால், அவர்களின் சித்தாந்தம் ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என இருக்கிறது. அந்த சித்தாந்தத்தின் முடிவு என்னவென்றால், இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதுதான். பிரிட்டிஷார்கள் இருக்கும்போதைவிட இப்போது இந்தியா சமச்சீரற்ற முறையில் உள்ளது.ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள், ஆனாலும் பிரதமர் அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய தயாராக இல்லை. அதே பிரதமர், மிகப்பெரும் பணக்காரர்களுக்கு ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார்.

அதானி பிரதமருக்கு நெருக்கமாக இருப்பதால் நாட்டின் அனைத்து துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிசக்தி உற்பத்தி ஆலைகள் அவருக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளது. ணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகியவற்றால் சிறு, குறு தொழில்கள் சீரழிந்துள்ளன. நாட்டின் அனைத்து நிறுவனங்களும், முகமைகளால் RSS மக்களால் நிரம்பியுள்ளன. ED, ID, CBI எல்லாமே அரசின் கையில் எதிர்கட்சிகளை அழிக்கும் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. தமிழ்நாடு வெள்ள நிவாரணமாக பணம் கேட்கும் போது, ஒன்றிய அரசு அதனை நிராகரிக்கிறது. தமிழ்நாட்டு விவசாயிகள், மீனவர்கள் கோரிய உதவியை ஒன்றிய அரசு ஒன்றும் செய்யவில்லை. பாஜக எம்.பி.க்கள் வெளிப்படையாகவே நாட்டின் அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என்று கூறுகின்றனர்.

ஜனநாயகத்தின் தாய் என உலக நாடுகள் இந்தியாவை பார்த்த பார்வை மாறிப்போய், ஜனநாயகம் இந்தியாவில் கொல்லப்படுகிறது என்று பார்க்கும் சூழல் வந்துள்ளது. இந்த சூழலை மாற்ற இந்தியா கூட்டணி என்ன செய்யப்போகிறது என கூற விரும்புகிறேன். முக்கிய பிரச்னையாக உள்ள வேலையின்மை தீர்க்கப்படும். மாநில அரசுகள் விரும்பினால் நீட் தேர்வு தொடரும். இதில் மாநில அரசே முடிவு செய்யும்.தமிழ்நாட்டு மக்களே தங்களுடைய கல்வி முறை எப்படி இருக்க வேண்டும், தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.தமிழ்நாட்டு பெண்களும் சரி, இந்தியாவின் பெண்களும் சரி, தேசத்தின் எதிர்காலத்தை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள்.

ழைப் பெண்களுக்காக அருமையான திட்டத்தை காங்கிரஸ் ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. குடும்பத்தின் ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டுக்கும் ₹1 லட்சம் வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.மீனவர்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் தொழிலை முன்னேற்ற தனி தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளோம். ஏற்கனவே சொன்னது போல, இது ஒரு தத்துவப் போர். நாட்டின் அரசியல் சாசனத்தை காக்கும் இந்தப் போரில் நாம் வெல்வோம் என்பதை உறுதியாகச் சொல்கிறேன்.நானும் காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டோடு எப்போதும் இருப்போம்.மோடி மட்டுமல்ல உலகில் எவராலும் தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டை தொட்டுக் கூட பார்க்க முடியாது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை.. ஒரே நாடு, ஒரே தலைவர் என்பதில் குறிக்கோளாக உள்ளனர் : நெல்லையில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை!! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Nella!! ,Rice ,I.N.D.I.A. ,Congress ,Rahul ,Nella ,Tenkasi ,Thoothukudi ,Kanyakumari ,Virudhunagar ,Sivaganga ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...