×

கன்னியாகுமரியில் அதிர்ச்சி!: மாங்காய் பறித்த குழந்தைகளுக்கு சூடு வைத்த கொடூர பெண்..போலீஸ் விசாரணை!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் மாங்காய் பறித்த குழந்தைகளுக்கு பெண் ஒருவர் சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் கொல்லங்கோட் நகராட்சியில் உள்ளது மஞ்சுதோப்பு பகுதி. இந்த பகுதியில் வசித்து வருபவர் தான் அருள்தாஸ் மற்றும் ஸ்ருதி தம்பதிகள். இவர்களுக்கு 8 மற்றும் 10 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகள் கடந்த 9ம் தேதி அவர்கள் வீட்டின் அருகே உள்ள கலா என்பவர் வீட்டின் முன்புறம் இருந்த மாங்காய் மரத்தில் இருந்து 2 மாங்காய் பறித்து அப்பகுதியில் சாப்பிட்டுள்ளார்.

இதனை கண்ட கலா என்ற பெண்மணி, 2 குழந்தைகளையும் பிடித்து தனது வீட்டில் இருந்த நாற்காலியில் கட்டி வைத்து,தோசை சுடக்கூடிய இரும்பு கம்பியில் தீ சூடேற்றி, குழந்தைகளின் கால் பகுதியில் வைத்துள்ளார். மேலும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர், குழந்தைகள் வீட்டிற்கு திரும்பி செல்லும் போது சூடுவைத்த பெண்ணுக்கு அஞ்சி, மிதிவண்டியில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக பெற்றோரிடம் கூறியுள்ளனர். மாலையில் குழந்தைகள் இருவரும் வலி தாங்க முடியாமல் துடித்ததை கண்ட பெற்றோர், குழந்தைகளை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது தீ காயம் என்பதை கண்டறிந்து குழந்தையின் பெற்றோரிடம் மருத்துவர் கூறியுள்ளார். இதையடுத்து, மருத்துவரின் அறிவுரை பேரில், குழந்தைகளிடம் பேசி பெற்றோர் உண்மையை கண்டறிந்தனர். தொடர்ந்து, குழந்தைகள் கொடுத்த தகவலின் பேரில் காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் கலா என்ற பெண்மணியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டு வருகிறது. மாங்காய் பறித்ததற்காக குழந்தைகளுக்கு பெண் ஒருவர் சூடு வைத்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடூர செயலில் ஈடுபட்ட பெண்மணி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post கன்னியாகுமரியில் அதிர்ச்சி!: மாங்காய் பறித்த குழந்தைகளுக்கு சூடு வைத்த கொடூர பெண்..போலீஸ் விசாரணை!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Kumari ,Kollankot ,Manjutopu ,Kollangode ,Kumari district ,Aruldas ,Shruti ,Dinakaran ,
× RELATED குமரியில் ஒரே நேரத்தில் சூரியன் அஸ்தமனம், சந்திரன் உதயம்