- ஊட்டி
- தேநீர் பூங்கா
- நீலகிரி
- தோட்டக்கலை
- தாவரவியல்
- தோட்டத்தில்
- ஆர்போரேட்டம்
- ரோஜா பூங்கா
- சிம்ஸ் பார்க்
- காட்டேரி பூங்கா
- தின மலர்
ஊட்டி: ஊட்டியில் உள்ள தேயிலை பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. நீலகிரியில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் தாவரவியல் பூங்கா,மரவியல் பூங்கா,ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா என பல்வேறு பூங்காக்கள் உள்ளன. தேயிலையை பிரபலப்படுத்தும் வகையில் ஊட்டி – கோத்தகிரி சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் தொட்டபெட்டா அருகே 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தோட்டக்கலைத்துறை பண்ணையில் கடந்த 2015ம் ஆண்டு தேயிலை பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு சுற்றுலா பயணிகள் தேயிலை தோட்டங்களின் நடுவே நடைபயணம் செய்ய வசதியாக நடைபாதை, பூங்காவினை முழுமையாக கண்டு ரசிக்கும் வகையில் காட்சி கோபுரங்கள்,குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு சாதனங்கள் கொண்ட சிறு பூங்கா உள்ளது.
தேயிலைத்தூள் உற்பத்தி செய்யும் இயந்திரங்களின் மாதிரிகளும் நிறுவப்பட்டுள்ளது. குடிநீர் வசதி,கழிப்பறை,பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. நடப்பு ஆண்டு கோடை சீசனுக்காக தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.இதேபோல், தேயிலை பூங்காவிலும் உள்ள பாத்திகளில் பல்வேறு ரகங்களில் பல வண்ண மலர்செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே சமவெளி பகுதியில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஊட்டி நகரில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுவது மட்டுமின்றி நகருக்கு வெளியே உள்ள இடங்களுக்கும் சென்று வருகின்றனர்.
இதனால் தொட்டபெட்டா சிகரம்,பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் காணப்படுகிறது. இதேபோல் கோத்தகிரி சாலையில் அமைந்துள்ள தேயிலை பூங்காவிலும் கூட்டம் காணப்படுகிறது.அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் குழந்தைகள் விளையாடி பொழுது போக்குவதுடன் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.கோடை சீசன் சமயத்தில் அதிளவிலான சுற்றுலா பயணிகள் வர கூடும் என்பதால் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தேயிலை தொடர்பான கோடை விழா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post தேயிலை பூங்காவை பார்வையிட்டு மகிழும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.