×

ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்?

எல்லோருடனும் மிக எளிதாக அன்பாக இருக்க முடியவில்லை, காரணம் என்ன?- விஸ்வநாதன், மதுரை.

சின்ன காரணம்தான். நாம் முதலில் நம் தகுதியைப் பார்ப்பதில்லை. பிறர் தகுதியை எடை போடத் துவங்கி விடுகின்றோம். நம் அன்புக்குத் தகுதியானவர்தானா இவர் என்று பார்க்கும்போது, அன்பு செலுத்தும் தகுதி நமக்குப் போய்விடுகிறது. எனவே, அன்பு என்பது போலித்தனமான உணர்வாகிவிடுகிறது. அன்பு செலுத்துவது போல் நடித்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளுகிறோம். பிறரையும் ஏமாற்றுகிறோம். அன்பாக இருக்கிறேன் என்று வாயால் சொல்லிக் கொள்ளலாம். ஒவ்வொருவரையும் சீர்தூக்கி பார்த்துக் கொண்டிருந்தால், அவர்களை நேசிக்க நேரம் எங்கே கிடைக்கப்போகிறது?

ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்?- வி.சங்கவி ராமராஜன்,
பட்டுக்கோட்டை.

வீடு கட்டலாம், கிரகப்பிரவேசம் செய்யலாம், அன்னதானம் செய்யலாம், அசையும், அசையா சொத்துக்களை பார்வையிடுதல், வாங்குதல், பத்திரம் பதிவு, ஹோமங்கள், புதிய பதவியோ, புதிய வேலையோ ஏற்கலாம்.

வெற்றிகரமான வாழ்க்கையா? திருப்திகரமான வாழ்க்கையா?- சரண்ராஜன், மதுரவாயல் – சென்னை.

வெற்றிகரமான வாழ்க்கையைவிட, திருப்திகரமான வாழ்க்கை உயர்ந்தது. வெற்றி பிறரால் தீர்மானிக்கப்படுகிறது. திருப்தி தன்னால் தீர்மானிக்கப்படுகிறது.

யார் சிறந்த நண்பன்?- நரேன், ஐதராபாத்.

இடுக்கண் களைவதாம் நட்பு என்றார் வள்ளுவர். துன்பத்தில் யார் தோள் கொடுக்கிறார்களோ அவர்கள்தான் சிறந்த நண்பர்கள். துன்பம் வரும் என்று முன்கூட்டியே எடுத்துக் கூறி எச்சரிப்பவர்கள் நல்ல நண்பர்கள். நம் உயர்வுகளில் பொறாமைப்படாமல் சந்தோஷப்படுபவர்கள் நண்பர்கள். ஒரு அறிஞர் தனது அனுபவத்தை இப்படிச் சொல்கிறார்; கண்ணாடிதான் என் சிறந்த நண்பன். ஏனென்றால் நான் அழும்போது அது ஒருபோதும் சிரித்ததில்லை.

மனித உணர்வில் புரிந்துகொள்ள முடியாத முரண்பாடு எது?- கோவை.ராசையா.

இதற்குச் சரியாக பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஒரு நண்பர் அனுப்பிய செய்தியை உதாரணமாகச் சொல்லலாம். சாலையோரம் உட்கார்ந்து இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு நேரச் சாப்பாடு வாங்கித் தர யோசிக்கும் நாம், அதையே ஓவியமாக வரைந்தால், சில ஆயிரம் கொடுத்து வீட்டில் மாட்டி வைக்கிறோம்.

அருள்ஜோதி

The post ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்? appeared first on Dinakaran.

Tags : Viswanathan ,Madurai ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை