சென்னை: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி, அண்ணாமலை, பால் கனகராஜ் உருவங்கள் பொறித்த தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் எழும்பூரில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன தணிக்கையில் வாழ்த்து அட்டைகள் சிக்கின. வேனில் எடுத்துச் செல்லப்பட்ட 17 பெட்டிகளில் இருந்த வாழ்த்து அட்டைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிரிண்டிங் பிரஸ் நிறுவனத்தின் பெயரும் வாழ்த்து அட்டைகளில் இடம்பெறவில்லை.
பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ராயப்பேட்டையில் இருந்து கொளத்தூர் பகுதிக்கு வாழ்த்து அட்டைகள் கொண்டு செல்வது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலையைச் சேர்ந்த லோடு வேன் டிரைவர் திருநாவுக்கரசுவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பாஜக, தேமுதிக சின்னம் பொறிக்கப்பட்ட பனியன்கள், சேலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த அசையாமணிவிளக்கு பகுதியில் கர்நாடகா பதிவெண் கொண்ட இரண்டு கண்டெய்னர் லாரிகளை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அதில் பிரதமர் மோடி படம் பொறிக்கப்பட்ட 40,000 பனியன்களும், தாமரை சின்னம் பொறித்த 1800 சேலைகளும் இருப்பது தெரியவந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லாததால் 2 கண்டெய்னர் லாரிகளோடு பனியன்கள், சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
The post சென்னையில் பிரதமர் மோடி, அண்ணாமலை உருவங்கள் பொறித்த தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.