×

நியூஆரியங்காவில் பலாப்பழம் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாம்: விவசாயிகள் வயல்களுக்கு செல்ல அச்சம்


செங்கோட்டை: கோடைகாலம் என்பதால் உணவை தேடி அலைந்த காட்டு யானைகள் தற்போது நியூ ஆரியங்காவில் உள்ள பலா பழம் தோட்டங்களில் முகாமிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்லவே அஞ்சி வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக – கேரள மாநில எல்லையோர கிராமங்களில் ஆண்டு தோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் பலாப்பழ சீசன் காலமாகும். இந்த ஆண்டுக்கான பலாப்பழ சீசன் தற்போது தொடங்கி உள்ளது. ஒரு பலாப்பழம் ரூ.150ல் இருந்து ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவில் ஆரியங்காவு, தென்மலை, கழுதுருட்டி, அச்சன்கோவில், குழத்து புலா, தமிழகத்தில் மேக்கரை, வடகரை, குண்டாறு, திருமலை கோவில் போன்ற மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் பலா மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன.

ஆரியங்காவு மற்றும் தென்மலை ஊராட்சி பகுதிகளில் அதிக அளவில் பலா மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு அதிக அளவில் பலாப்பழங்கள் காய்த்து தொங்குகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வரும் யானைகள் பலா பழங்களை பறித்து தின்று தங்களது பசியை தீர்த்துக் கொள்கின்றன. பலாபழம் ருசி கண்ட யானைகள் பழங்களைத் தின்றுவிட்டு அருகில் உள்ள தோப்புகளில் தங்களது குட்டிகளுடன் முகாமிட்டு வருகிறது. இதனால் யானை எப்போது விரட்டுமோ என்ற அச்சத்துடன் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தங்களுக்கு எட்டுகிற தூரத்தில் உள்ள மரங்களில் பழங்களை மட்டும் பறித்து சாப்பிடுகிறது. எட்டாத உயரத்தில் உள்ள பலாபழத்தை மரத்துடன் ஒடித்து தின்றும் சேதப்படுத்துகிறது. இதனால் இங்குள்ள விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்ட பலா மரங்களை இழந்துள்ளனர்.

மேலும் யானைகள் கூட்டம் தென்னை, வாழை மரங்களையும் விட்டு வைப்பதில்லை. இந்நிலையில் நேற்று புதிய ஆரியங்காவு ரயில் நிலையம் அருகே உள்ள ராஜு என்பவரது வயலில் உள்ள பலா மரத்திலிருந்து பலாப்பழ மரத்தை அசைத்து பறிக்க காட்டு யானை முயன்றது. அதன் அருகே உள்ள மின்கம்பத்தில் இந்த மரம் விழுந்தால் விளைவு என்னவாக இருக்கும் என்பது யானைக்கு தெரியாது. எனவே வனத்துறையினர் வனவிலங்குகளை ஊருக்குள் வராமல் தடுக்க அகழிகள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நியூஆரியங்காவில் பலாப்பழம் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாம்: விவசாயிகள் வயல்களுக்கு செல்ல அச்சம் appeared first on Dinakaran.

Tags : New Ariyan ,Sengottai ,New Ariyanka ,Tamil Nadu - ,Kerala ,Western Ghats ,Dinakaran ,
× RELATED செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில்...