×

ஒன்றியத்தில் புதிய அரசு பதவி ஏற்றதும் ஜவுளிக்கான பல அடுக்கு ஜிஎஸ்டியை ஒருமுனை வரியாக மாற்ற வேண்டும்: ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்


சேலம்: ஒன்றியத்தில் புதிய அரசு பதவி ஏற்றதும் ஜவுளிக்கான பல அடுக்கு ஜிஎஸ்டியை ஒருமுனை வரியாக மாற்ற வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக விசைத்தறி நெசவு தொழில் தொடர்ந்து பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஜவுளி ஏற்றுமதி பெரும்பாலும் குறைந்துள்ளது. உலக அளவில் ஏற்றுமதியில் சீனா முதலிடம் வகிக்கிறது. அடுத்து வியட்நாம், இந்தோனேஷியா, கம்போடிய, பங்களதேஷ் என பல நாடுகளில் ஜவுளி ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிறது. ஆனால் பெரிய நாடான இந்தியாவில் ஏற்றுமதியில் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஜவுளி உற்பத்தி மேம்பாட்டுக்கான பல்வேறு கோரிக்கைகளை உற்பத்தியாளர்கள் முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக வேட்பாளர்களிடமும் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் பொருளாளர் சிங்காரம் கூறியதாவது: தமிழகத்தில் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கோவை, நாமக்கல், திருப்பூர், விருதுநகர் உள்பட பத்து மாவட்டங்களில் விசைத்தறி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இந்த மாவட்டங்களில் தயாராகும் ஜவுளிகள் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, கொல்கத்தா, மும்பை போன்ற மாநிலங்களுக்கு தேவையான ஜவுளி ரகங்கள் அனுப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து நவீன விசைத்தறிகள் தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு, வெளிநாட்டு மக்களுக்கு தேவையான ஜவுளிகள் தயார் செய்யப்பட்டு வந்தது, ஏற்றுமதியும் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பண மதிப்பிழப்பு ஒன்றிய அரசு அறிவித்து உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அடுத்து கொரோனா தொற்று நாட்டையே உலுக்கி போட்டது. இதைத்தொடர்ந்து வரலாறு காணாத அளவில் பருத்தி நூலின் விலை 50 கிலோ ₹9 ஆயிரத்திலிருந்து ₹18 ஆயிரமாக உயர்ந்தது. இந்த விலை உயர்வு விசைத்தறி தொழிலை முடக்கிபோட்டது. விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டன. சில ஊர்களில் தொழில் செய்ய முடியாமல் விசைத்தறிகளை பழைய இரும்புக்கடைகளில் எடைபோட்டு விற்ற அவல நிலை காணமுடிந்தது. வெளிநாட்டு ஆர்டர்கள் குறைந்து போனதால் நவீன விசைத்தறிகளில் தயார் செய்ய ரகம் இல்லாத நிலை ஏற்பட்டது.

நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள நவீன விசைத்தறிகளில் டவல் தயார் செய்யம் நிலை ஏற்பட்டது. இதனால் டவல் உற்பத்தி அதிகளவு உற்பத்தி ஆனது. உற்பத்திக்கு தகுந்தப்படி விற்பனை இல்லை. டவல் தேக்கம் அதிகரித்து தொழில் தொடர்ந்து செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. தொழிலாளர்கள் ேவலை இல்லாமல் திருமணங்கள் விழாக்கள் போன்ற விசேஷங்களில் பணியாற்ற செல்லும் நிலையை தற்போது காணமுடிகிறது. இந்த தொழிலுக்கு தமிழக அரசு இரண்டு மாதத்திற்கு ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வருகின்ற நிலையால் சிறு விசைத்தறி கூடங்கள் ஓரளவிற்கு இயங்கி வருகிறது. மேலும் பத்து தறிகள் உள்ள விசைத்தறி கூடங்களில் 4 தறி அளவே இயங்கி வருகிறது.

வருமானம் குறைவாக உள்ளதால் பல்வேறு வகையான தொழில்களுக்கு பணியாற்றும் நிலை உள்ளது. தமிழகத்தில் ஒரு கோடி மக்களின் வாழ்வாதாரம் விசைத்தறி நெசவுத்தொழிலை நம்பி உள்ளனர். ஒன்றியத்தில் புதிய அரசு பதவி ஏற்றதும் விசைத்தறி தொழில் வளம் பெற ஜவுளி ஏற்றுமதிக்கு தனி அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும். ஜவுளிக்கு பல அடுக்கு வரியாக உள்ள ஜிஎஸ்டியை ஒருமுனை வரியாக மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு சிங்காரம் கூறினார்.

The post ஒன்றியத்தில் புதிய அரசு பதவி ஏற்றதும் ஜவுளிக்கான பல அடுக்கு ஜிஎஸ்டியை ஒருமுனை வரியாக மாற்ற வேண்டும்: ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union ,Salem ,India ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...