- சியாம் தாய்-பர்மா
- இரண்டாம் உலக போர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- நரேந்திர மோடி
- தமிழர்கள்
- இரண்டாம் உலகப் போர்
- தின மலர்
சென்னை: இரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு தமிழ் மரபுப்படி ‘நடுகல்’ அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ₹10 லட்சம் நிதியுதவி வழங்கினார். இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பானிய ராணுவத்திடம் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் மலேசியா, இந்தோனேசியா, பர்மா நாடுகளில் இருந்து கட்டாயப்படுத்தி ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர். தாய்லாந்து நாட்டினை பர்மா நாட்டுடன் இணைக்கும் ரயில் பாதையின் கட்டுமான பணிகளில் ஏறத்தாழ 1.50 லட்சம் தமிழர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இப்பணியின்போது வேலைச்சுமை, போதிய உணவு கிடைக்காமை, நோய் முதலிய காரணங்களால் ஏறத்தாழ 70 ஆயிரம் தமிழர்கள் இறந்துள்ளனர்.
இந்நிலையில் தாய்லாந்து நாட்டின் காஞ்சனாபுரியில் உள்ள தவாவோர்ன் என்ற புத்தர் கோயில் வளாகத்தில் இக்கட்டுமான பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களின் உடல்கள் மொத்தமாக புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு புதைக்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில், ‘நடுகல்’ அமைத்திட தாய்லாந்து நாட்டு தமிழ்ச் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின், தாய்லாய்ந்து தமிழ்ச் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, இரண்டாம் உலகப்போரின்போது அங்கு உயிர்நீத்த தமிழர்களுக்கு ‘நடுகல்’ அமைத்திட ₹10 லட்சம் நிதியுதவி வழங்கினார். இதை தொடர்ந்து, தாய்லாந்து நாட்டில் இருந்து வந்துள்ள தாய்லாந்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ரமேஷ் தர்மராஜன், துணைத்தலைவர் ரமணன், ஒருங்கிணைப்பாளர் சுந்தரகுமார், செய்தி தொடர்பாளர் மகேந்திரன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று நேரில் சந்தித்து, தாய்லாந்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு ‘நடுகல்’ அமைத்திட வழங்கிய நிதியுதவிக்காக நன்றி தெரிவித்தனர். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் நலனை பாதுகாத்திட அயலகத் தமிழர் நலத்துறை ஒன்றை உருவாக்கி, உலகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்வதற்காக தாய்லாந்து நாட்டின் சார்பில் நன்றியுடன் பாராட்டுவதாகவும் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின்போது, தாய்லாந்து காஞ்சனாபுரியில் 1.5.2024 அன்று நடைபெற இருக்கும் ‘நடுகல்’ திறப்பு விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்தனர். தற்போது தேர்தல் நடந்து வரும் பரபரப்பான சூழ்நிலையிலும் எங்களை வரவேற்று, அன்புடன் எங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்ட உலகத் தமிழர்களின் நலன் காக்கும் முதல்வரை என்றும் நினைவில் வைத்து நன்றியுடன் போற்றிக் கொண்டாடுவோம் என்று தாய்லாந்து தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் குறிப்பிட்டனர்.
The post இரண்டாம் உலகப் போரின்போது சியாம் தாய்லாந்து-பர்மா ரயில்பாதை பணியில் உயிரிழந்த தமிழர்களுக்கு ‘நடுகல்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் ₹10 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.