×

நிலுவை வழக்குகள் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்புதல் தீவிரமானது: உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: அசாமை சேர்ந்த எம்எல்ஏ கரீம் உதின் பர்புய்யாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. ஆனால் இந்த வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு அளிக்கப்பட்டதாக எம்எல்ஏ கரீம் கடந்த மார்ச் 20ம் தேதி பேஸ்புக்கில் பதிவு வெளியிட்டுள்ளார். பின்னர் ஏப்ரல் 8ம் தேதி, தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் கொண்ட அமர்வு, பேஸ்புக்கில் தவறான பதிவுக்காக எம்எல்ஏ கரீமுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தொடங்கியது.

இதுதொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது:
இன்றைய காலகட்டத்தில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து தவறான செய்திகள், கருத்துகள், கட்டுரைகள் வெளியிட சமூக ஊடகங்களை பயன்படுத்துவது கவலைக்குரியது. எந்தவொரு குற்றச்சாட்டையும், விமர்சனத்தையும் தாங்கும் அளவுக்கு எங்கள் தோள்கள் விசாலமானவையாக இருந்தாலும், பேச்சு, கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தவறான கருத்துகள், பதிவுகள் ஆகியவை நீதித்துறையின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் போக்கை கொண்டுள்ளன. இதுபோன்ற நீதித்துறை விஷயங்களில் தலையிடுவது தீவிர பரிசீலனைக்கு உரியது.

வழக்கறிஞர்களின் வாதங்களின் போது, சில சமயம் ஒரு தரப்புக்கு ஆதரவாகவும், சில சமயம் எதிராகவும் நீதிபதிகள் கருத்து தெரிவிப்பது வழக்கமானது. இருப்பினும், அதை வைத்து சமூக ஊடகங்களில் உண்மைகளை திரித்து அல்லது சரியான உண்மையை வெளியிடாமல் கருத்துகள் செய்திகள் வெளியிட யாருக்கும், எந்த வழக்கறிஞருக்கும் உரிமையும் சுதந்திரமும் கிடையாது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து உரிய அமர்வில் இந்த வழக்கை பட்டியலிட பதிவுத்துறையை கேட்டுக் கொண்டனர்.

The post நிலுவை வழக்குகள் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்புதல் தீவிரமானது: உச்ச நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,Assam ,MLA ,Karim Uddin Barbuiya ,Karim ,Facebook ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு