×

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் ஏழை பெண்களுக்கு மாதம் ₹8500 வழங்கப்படும்: ராகுல்காந்தி வாக்குறுதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மக்களவை தொகுதியில் உள்ள அனுப்கரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:
இந்த மக்களவைத் தேர்தல் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கானது. இது பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர், பொதுப் பிரிவில் உள்ள ஏழைகளின் தேர்தல். இன்று நாட்டின் மிகப்பெரிய பிரச்னை வேலையின்மை, அதைத் தொடர்ந்து பணவீக்கம். யாரையாவது கேளுங்கள். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம்தான் மிகப்பெரிய பிரச்சினை.

பணவீக்கம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொண்ணூறு சதவிகிதம் பேர் பணவீக்கம் என்று சொல்வார்கள் ஆனால் மீடியாவைப் பின்பற்றினால் அம்பானியின் மகன் திருமணம்தான் மிக முக்கியமான பிரச் னை என்று தோன்றும். மோடியின் முகம் 24 மணி நேரமும் ஊடகங்களில் தெரியும். சில சமயங்களில் அவர் கடலுக்கு அடியில் செல்வார், சில சமயங்களில் கடல் விமானத்தில் பறப்பார், சில சமயம் தட்டை அடித்து ஒலி எழுப்புவார், சில சமயங்களில் மொபைல் போன்களின் ஒளிரும் விளக்கைக் காட்டச் சொல்வார்.

மக்களின் குரலை எழுப்புவதே ஊடகங்களின் பணி. ஆனால் அது பொதுமக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை . ஊடக நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் கோடீஸ்வர உரிமையாளர்கள் பத்திரிகையாளர்களை பேச அனுமதிக்க மாட்டார்கள். இரண்டு-மூன்று சதவிகிதம் பேர் ஊடகங்களில் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். 15-20 பேர் ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். இவர்கள் 24 மணி நேரமும் மோடியைப் புகழ்கிறார்கள்.

நாட்டின் 25-30 பணக்காரர்களின் கடன்களை மோடி தள்ளுபடி செய்துள்ளார். இந்த பணத்தை வைத்து அடுத்த 24 ஆண்டுகளாக மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் ஊதியம் வழங்கியிருக்கலாம். மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சியின் முதல் பணியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிக்கப்படும்.

கோடீஸ்வரர்களின் கடன்களை மோடி தள்ளுபடி செய்தார் ஆனால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. உங்கள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது, நீங்கள் பயங்கரவாதிகள், உங்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கொடுக்க மாட்டோம் என்று மோடி தெளிவாக விவசாயிகளிடம் கூறினார். எங்கள் அரசாங்கம் குறைந்தபட்ச ஆதாரவிலையை கொடுக்க புதிய சட்டத்தை அமல்படுத்தும். மோடியால் கோடீஸ்வரர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடிந்தால், காங்கிரஸ் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யும். காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழை பெண்களுக்கும் மாதம் ரூ.8500 வழங்கப்படும். இது உறுதி.

காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால் தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ பெரும் தொழிலதிபர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுள்ளது. வரவிருக்கும் தேர்தல் நாட்டின் ஏழை மக்களுக்கும் 22 முதல் 25 வரை உள்ள பெரும் தொழில்அதிபர்களுக்கும் இடையிலான போர். அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான போர். இந்த போரில் நாங்கள் 90 சதவீத மக்களாகிய பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஏழைகள் பக்கம் இருக்கிறோம். ஒரு பக்கம் அதானி மற்றும் இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள், தேசிய ஊடகங்கள். பணமெல்லாம் அவர்கள் கையில் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதமர் மோடி ஊழல்
பிரதமர் மோடியும், பா.ஜவும் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஊழல் செய்துள்ளனர் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். அவர் கூறுகையில்,’ நாட்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு தொழிலதிபர் கவுதம் அதானியின் பங்கு விலைகள் உயரத் தொடங்கின. அதானிக்கும் பிரதமருக்கும் இடையே நல்ல உறவு இருப்பதை இந்தியா அறிந்ததால் அவரது பங்குகள் தொடர்ந்து உயர்ந்தன. ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கூறிய மோடி தேர்தல் பத்திரத் திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தால் தொழிலதிபர்கள் பாஜவுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கொடுத்தனர். இதன் மூலம் பிரதமர் மோடி ஊழல் செய்துள்ளார்’ என்றார்.

The post மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் ஏழை பெண்களுக்கு மாதம் ₹8500 வழங்கப்படும்: ராகுல்காந்தி வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Congress ,Rahul Gandhi ,Jaipur ,Anupgarh ,Bikaner Lok Sabha ,Rajasthan ,Lok Sabha ,Dalits ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...