×

தமிழகம் முழுவதும் ரம்ஜான் கோலாகல கொண்டாட்டம்: சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ரமலான் நோன்பு கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கியது. கடந்த செவ்வாய்க்கிழமை (9ம் தேதி) ‘‘ஷவ்வால்” பிறை தென்படாததை தொடர்ந்து ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 11ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்தார். அதன்படி ரம்ஜான் பண்டிகை நேற்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி, கட்டியணைத்து ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். ஏழை எளிய மக்கள் மற்றும் நண்பர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கினர். மேலும் சில இடங்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் இஸ்லாமியர்கள் வழங்கினர். ரம்ஜானை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை பிராட்வே டான்போஸ்கோ பள்ளி மைதானத்தில் நேற்று காலை 7.50 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பிறகு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பெருநாள் உரை நிகழ்த்தினார்.

இதே போல, சென்னை தீவுத்திடலில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் திருவல்லிக்கேணி, பெரியமேடு, ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். சென்னை மயிலாப்பூர் ஜிம்மா மசூதியில் நடந்த சிறப்பு தொழுகையில் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் கலந்து கொண்டார்.

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்த 30 நாள் ரமலான் நோன்புக்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள மசூதிகளுக்கு 7,040 டன் பச்சரிசி வழங்கி நோன்பு கஞ்சிக்கு ஏற்பாடு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. ரம்ஜான் நோன்பு தொடங்கியது முதல் இன்று வரை எந்த தங்கு தடையும் இல்லாமல் தலைநகரிலிருந்து மாவட்ட வாரியாக உதவிப்பொருட்கள் கொண்டு செல்வதற்கு தேர்தல் ஆணையம் உடனுக்குடன் அனுமதி வழங்கியது. ஏழைகளுக்கு செல்ல வேண்டிய புடவை, கைலி, சட்டை ஆகியவை கொண்டு செல்ல கெடுபிடி இல்லை. அன்பும், சகோதரத்துவமும், தீமைக்கும் வழி வகுக்காமல் இந்த மார்க்கமே பிறருக்கு உதவி செய்யும் மார்க்கம்.

இன்று எப்படி மகிழ்ச்சியோடு, சகோதரத்துவத்தோடு, ஒற்றுமையாக இருக்கிறோமோ அதே போல காலம் முழுவதும் இருக்க வேண்டும். இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களுக்கு தெரியும். ஆனால் தேர்தல் நாளன்று அனைவரும் விடுமுறை எடுத்து விட்டு, வாக்களிக்க செல்லாமல் இருக்க கூடாது. 100% வாக்குப்பதிவுக்கு வெயிலை பார்க்காமல் குடை எடுத்துக் கொண்டு வந்தாவது வாக்களியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தொழுகையை நிறைவு செய்து விட்டு வெளியே வந்த இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு புத்தாடை, உணவு, பணம் உள்ளிட்டவற்றை தானமாக வழங்கினர். ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்த இடங்கள் மற்றும் பள்ளிவாசல்களின் வெளியே பாதுகாப்பு கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post தமிழகம் முழுவதும் ரம்ஜான் கோலாகல கொண்டாட்டம்: சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ramadan Kholagala ,Tamil Nadu ,Chennai ,Ramadan ,Ramzan ,Shawwal ,Prayer ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...