×

தமிழகத்தில் உச்சம் தொட்ட தேர்தல் பிரச்சாரம்; ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் நாளை ஒரே மேடையில் பிரச்சாரம்.! நெல்லை, கோவையில் ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் உச்சம் தொட்டுள்ள நிலையில், நாளை ராகுல் காந்தி தமிழகம் வருகை தருகிறார். கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ஒரே மேடையில் பிரச்சாரம் செய்கின்றார். ராகுல்காந்தி தமிழக வருகையை முன்னிட்டு காங்கிரசார் நெல்லை, கோவையில் ஏற்பாடுகள் தீவிரமாக செய்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குபதிவுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் தேர்தல் திருவிழாவாகத் தான் இருக்கிறது. கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு கேட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலுவாக அமைந்துள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அதேபோன்று கூட்டணி கட்சி தலைவர்களும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் பிரதான கட்சியான காங்கிரஸ் உள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேசிய தலைவர்கள் தமிழகத்தை முற்றுகையிட தொடங்கியுள்ளனர். பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இதுவரை தமிழகத்துக்கு 7 முறை வந்து சென்று விட்டார். அவரை மிஞ்சும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்தை முற்றுகையிட்டு பிரச்சாரம் செய்ய உள்ளனர். முதல்கட்டமாக இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகிறார். அவர் காலையில் திருநெல்வேலியிலும், மாலையில் கோவை ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்தியா கூட்டணி சாா்பில் திருநெல்வேலி உள்பட தென் தமிழக பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ராகுல் காந்தி நெல்லை வருகை தருகிறார். பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் ராகுல் காந்தி பேசுகிறார். நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறார். இதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வரும் ராகுல்காந்தி ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி திடலில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்குகிறார். அங்கிருந்து ரோடு ஷோவிலும் பங்கேற்கிறார். பின்னர் பொதுக்கூட்ட திடலை அடைகிறார். அவர் வருகையை முன்னிட்டு, திருநெல்வேலியில் காலை 6 மணி முதல் ஏப்ரல் 13ம் தேதி காலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சாரத்தின் போது, திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் தென் மாவட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு கோவை செல்லும் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக, கோவை செட்டிபாளையம் எல் அன்ட் டி பைபாஸ் ரோட்டில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் இருவரும் இணைந்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகின்றனர். ராகுல்காந்தியின் வருகையை முன்னிட்டு கோவை மற்றும் நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை மற்றும் ஏற்பாடுகளை, தமிழக அமைச்சர்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் ஏற்கனவே நேரில் சென்று பார்வையிட்டனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக தமிழகம் வரும் நிலையில், காங்கிரஸ் சார்பில் முதல் முறையாக ராகுல் காந்தி தமிழகம் வர இருப்பது தேர்தல் பரபரப்பை அதிகரித்துள்ளது. ராகுல்காந்தி வருகையை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பிரியங்கா காந்தி திருச்சி வருகை தருகிறார். அவரை தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இவர்களின் சுற்றுப்பயணம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று காங்கிசார் தெரிவித்தனர்.

The post தமிழகத்தில் உச்சம் தொட்ட தேர்தல் பிரச்சாரம்; ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் நாளை ஒரே மேடையில் பிரச்சாரம்.! நெல்லை, கோவையில் ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Rahul Gandhi ,M.U. K. Stalin ,Goa ,Chennai ,Goya ,Principal ,M.U. K. ,Stalin ,Congress ,Nella ,Rakulkanti ,Tamil ,Nella, Goa ,
× RELATED குடிமைப் பணி தேர்வில் 3ம் முறையாக...