×

தாராபுரம் அருகே நாய்கள் கடித்து குதறியதில் 7 ஆடுகள் பலி

தாராபுரம் : திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த பொன்னிவாடி கிராமம் எலுகாம்வலசு தென்னைமரத்து தோட்டத்தை சேர்ந்தவர் மாட்டுக்காரன் என்கிற பழனியப்பன் (40). இவர், ஆட்டுப்பட்டியில் 20 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். வழக்கம்போல நேற்று முன்தினம் மாலை மேய்ச்சல் முடிந்ததும் ஆடுகளை, பட்டிக்கு ஓட்டி வந்து அடைத்துள்ளார். பின்னர், சிறிது தூரத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை அப்பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்கள் கூட்டம், பழனியப்பனின் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து அங்கிருந்த செம்மறி ஆடுகளை வெறித்தனமாக கடித்துக்குதறியது.

இதில், ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 7 ஆடுகள் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியாகின. மேலும், 5 ஆடுகள் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல எழுந்து ஆட்டுப்பட்டிக்கு சென்ற பழனியப்பன், நாய்கள் குதறியதில் வளர்ப்பு ஆடுகள் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து எலுகாம்வலசு கால்நடை மருத்துவர்கள் மற்றும் வருவாய்த்துறையினருக்கு பழனியப்பன் தகவல் அளித்தார். இச்சம்பவம் அப்பகுதியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

The post தாராபுரம் அருகே நாய்கள் கடித்து குதறியதில் 7 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Mattukaran ,Palaniappan ,Elukamvalasu ,Ponniwadi ,Tirupur district ,Dinakaran ,
× RELATED காதலனுடன் தங்கையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அண்ணன்