போடி: போடி பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவரில், மாவட்டத்தின் பெருமைகள் மட்டுமின்றி, தமிழர்களின் வீர விளையாட்டை எதிரொலிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டு காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. போடி நகராட்சி 33 வார்டுகளுடன் செயல்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் சுமார் 1.10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நூறு ஆண்டுகளைக் கடந்த நகராட்சி நிர்வாகம் போடி நகர் பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஆரம்பகாலத்தில் போடி ஜக்கம்மா நாயக்கன்பட்டி பகுதியில் பொதுமக்கள் அன்றாடம் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் பஸ்கள் நிறுத்தும் பழைய பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. காலப்போக்கில் மக்கள் தொகை அதிகரிப்பு, சாலை விரிவாக்கம், வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு, போக் குவரத்து நெரிசல் காரணமாக இந்த பஸ் நிலையத்தில் கூடுதல் எண்ணிக்கையில் பஸ்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது. போதிய இடவசதி இல்லாததால் பஸ் நிலைய விரிவாக்க பணிகளை மேற்கொள்ள முடியாமல் நகராட்சி நிர்வாகம் தவித்து வந்தது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் கோரிக்கையின் அடிப்படையில் போடி நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. இதன்படி போடி காமராஜர் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு, புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த 1968ல் செயல்பாட்டிற்கு வந்தது.
இந்த பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் புகழ்பெற்ற வாரச்சந்தை இயங்கி வந்தது. புதிய பஸ் நிலையத்தின் அபிவிருத்திக்காக கடந்த 2004ம் ஆண்டு வாரச்சந்தையை போடி – தேவாரம் சாலையில் உள்ள போடி நகராட்சி குப்பை கிடங்கு பகுதிக்கு மாற்றப்பட்டதுடன், புதிய பஸ் நிலையத்தில் விரிவக்க பணிகளும் நடைபெற்றது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து கேரள மாநிலனத்திற்கும், தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, திருநெல்வேலி, திசையன்விளை, திருச்சி, சங்கரன்கோயில், விருதுநகர், சிவகாசி, திருச்செந்தூர், பழநி, மதுரை, ராமநாதபுரம், கோயமுத்தூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்படி நாள்தோறும் 150க்கும் மேற்பட்ட பேருந்துகள் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன. பேருந்து நிலையத்தில் நுழைவாயிலில் புதிய டூவலர் ஸ்டாண்ட், வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. நுழைவாயிலின் உட்புறம் உள்ள சுற்றுச்சுவற்றில் பல்வேறு விழாக்கள், கண்ணீர் அஞ்சலி, போராட்டம் உள்ளிட்வை தொடர்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதையடுத்து இப்பகுதியில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என நகராட்சி தரப்பில் அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டது. ஆனால் அதனை யாரும் கருத்தில் கொள்ளாமல் மீண்டும், மீண்டும் போஸ்டர்களை ஒட்டிவந்தனர்.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் விவசாய பணிகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள், தமிழர்களின் வீர விளையாட்டுகள் உள்ளிட்டவற்றை சுவரோவியங்களாக வரைய முடிவு செய்யப்பட்டது. இதன்படி தேனி மாவட்டத்தின் சிறப்புகளை குறிக்கும் வைகை அணை, மேகமலை, போடி மெட்டு, சுருளி அருவி, மலை பயிர்களான ஏலக்காய், காபி, தேயிலை உள்ளிட்ட செடிகளின் இயற்கை விவசாயம், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு, கம்பு சண்டை, மாடுகளை பயன்படுத்தி நடைபெறும் உழவுப்பணி, வயலில் பெண்கள் நாற்றுகளை நடவு செய்வது மற்றும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் கர்னல் பென்னிகுக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்டவை பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவர் பகுதியை தற்போது ஓவியங்களாக அலங்கரிக்கின்றன. நகராட்சி நிர்வாகத்தின் இந்த திடீர் நடவடிக்கை, அனைத்து தரப்பு மக்களிடமும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
The post மாவட்டத்தின் பெருமைகளை பறைசாற்றுவதுடன் தமிழர்களின் வீர விளையாட்டை எதிரொலிக்கும் ஓவியங்கள்: போடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை appeared first on Dinakaran.