×

பாஜ அமைச்சர் பிரகலாத் ஜோஷியை எதிர்த்து போட்டியிடும் லிங்காயத்து மடாதிபதி திங்காலேஷ்வர் சுவாமிக்கு காங்கிரஸ் ஆதரவு?

பெங்களூரு : தார்வாட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் லிங்காயத்து மடாதிபதி திங்காலேஷ்வர் சுவாமிக்கு ஆதரவளிப்பது குறித்து இன்று முதல்வர் சித்தராமையாவுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் கர்நாடகாவில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடக்கும் நிலையில், 28 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நம்பிக்கையில் இருந்த பாஜவிற்கு ஒவ்வொரு தொகுதியாக பிரச்னை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

சுமார் 12 தொகுதிகளில் பாஜ வேட்பாளர் அறிவிப்பு அந்தந்த தொகுதி மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஷிவமொக்கா தொகுதியில் எடியூரப்பா மகனும் எம்.பியுமான ராகவேந்திராவை எதிர்த்து பாஜ மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா தனித்து போட்டியிடுகிறார். அதனால் அந்த தொகுதியில் பாஜ வாக்குகள் பிரியும் சூழல் உள்ளது.

இந்நிலையில், தார்வாட் தொகுதியிலும் பாஜவிற்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. தார்வாட் மக்களவை தொகுதியில் 60 சதவீதம் வாக்குகள் லிங்காயத்து சமூக வாக்குகள் தான். அதனால் அத்தொகுதியில் லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவரையே பாஜ வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று லிங்காயத்து மடங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் பிராமணரும் ஒன்றிய அமைச்சருமான பிரகலாத் ஜோஷியை தார்வாட் தொகுதி வேட்பாளராக பாஜ அறிவித்தது.

அதனால் அதிருப்தியடைந்த லிங்காயத்து மடாதிபதிகள் ஆலோசனை நடத்தி, திங்காலேஷ்வர் சுவாமி (லிங்காயத்து மடாதிபதி) தார்வாட் தொகுதியில் தனித்து போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது. கடந்த திங்கட்கிழமை இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்ததிலிருந்து லிங்காயத்து சமூகம் வஞ்சிக்கப்படுவதாக அச்சமூகத்தினரும் அச்சமூக மடாதிபதிகளும் அதிருப்தி தெரிவித்துவந்த நிலையில், இத்தேர்தலில் தார்வாட் தொகுதியில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

தார்வாட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் லிங்காயத்து மடாதிபதி திங்காலேஷ்வர் சுவாமிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்று மடாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி அத்தொகுதிக்கு வினோத் அசூட்டியை வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமார், மடாதிபதி திங்காலேஷ்வர் சுவாமிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிப்பதாக இருந்தால் அதில் எந்த ஒளிவுமறைவும் இருக்காது. நேரடியாகவே ஆதரவளித்துவிடுவோம்.

ஆனால் நாங்கள் அத்தொகுதியில் வேட்பாளரை நிறுத்தியுள்ளோம்.
தார்வாட் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வினோத் அசூட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். நாங்கள் வேட்பாளரை அறிவிக்கும் முன்பாக, மடாதிபதி திங்காலேஷ்வர் சுவாமி ஆதரவு கேட்டிருந்தால் சூழல் வேறு மாதிரி இருந்திருக்கும். காங்கிரஸ் கட்சியின் ஆதரவை மடாதிபதி கோரியிருக்கிறார். மடாதிபதி திங்காலேஷ்வர் சுவாமி மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அவர் மதநல்லிணக்கத்துடன் செயல்படுபவர்.

எங்கள் வேட்பாளரும் நல்ல மனிதர். இவ்விவகாரத்தில் நானும் முதல்வரும் இன்று (நேற்று) அல்லது நாளை (இன்று) ஆலோசித்து முடிவு செய்வோம் என்று டி.கே.சிவகுமார் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ள வினோத்தை வாபஸ் பெற்றுவிட்டு, லிங்காயத்து மடாதிபதி திங்காலேஷ்வர் சுவாமிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post பாஜ அமைச்சர் பிரகலாத் ஜோஷியை எதிர்த்து போட்டியிடும் லிங்காயத்து மடாதிபதி திங்காலேஷ்வர் சுவாமிக்கு காங்கிரஸ் ஆதரவு? appeared first on Dinakaran.

Tags : Congress ,Lingayat abbot ,Dingaleshwar Swamy ,BJP ,Minister ,Prakalat Joshi ,Bengaluru ,DK Sivakumar ,Chief Minister ,Siddaramaiah ,Lingayat ,Dharwad ,Lok Sabha ,Karnataka ,Dhingaleshwar Swamy ,Dinakaran ,
× RELATED காவிரி பிரச்னையில் காங்கிரஸ் தலைமை தலையிட திருமாவளவன் வலியுறுத்தல்