புதுக்கோட்டை, ஏப்.11: புதுக்கோட்டை அருகே மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பெரியநாயகி(58). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள தைலமர காட்டு பகுதியில் கன்று குட்டியை பிடிக்க சென்றுள்ளார்.அவர் வீட்டை விட்டு சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது வீட்டினர் பெரியநாயகியை தேடிச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, காட்டில் பலத்த காயங்களுடன் சடலமாக பெரியநாயகி கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த சுமார் 5 பவுன் நகைகளை காணவில்லை.
இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பெரியநாயகியை மர்ம நபர்கள் தாக்கி கொலை செய்துவிட்டு, அவரது நகைகளை திருடிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். அதன் பின் பெரியநாயகியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளார் வெள்ளனூர் போலீசார் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வலியுறுத்தியும் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி கொலை செய்யப்பட்ட பெண்மணியின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் முத்துடையான்பட்டி அருகே திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை கலந்துகொண்டார். மேலும் இந்த மறியல் போராட்டத்தால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post புதுக்கோட்ைட அருகே மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யகோரி உறவினர்கள் மறியல் appeared first on Dinakaran.