- மயிலாடுதுறை
- பாராளுமன்ற மக்களவைத் தொகுதி
- அதிகாரி
- மகாபாரதி
- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாநாடு
- மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல்
மயிலாடுதுறை, ஏப். 11: அச்சுறுத்தலுக்கும் இடமின்றி நேர்மையாக வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் மகாபாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், நியாயவிலைக்கடை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர், தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் உடனே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்படும் பணம் விநியோகம், பரிசுப்பொருள் விநியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும்படை அலுவலர்கள் குழு, நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்தி போலீஸ் பாதுகாப்புடன் சுழற்சி முறையில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இத்தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இளம் வாக்காளர்கள் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதற்காக ராட்சத பலூன், விழிப்புணர்வு மாரத்தான், கோலப்போட்டி, விழிப்புணர்வு பேரணி ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இளம் வாக்காளர்களுக்கு கல்லூரி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கிராமப் பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வாக்காளர்களிடம் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இம்மாவட்டத்தில் 8000 மகளிர் சுய உதவிக்குழு உள்ளனர். இதில் 1 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் இம்மாவட்டம் 73.41 சதவீத வாக்குப் பதிவாகி உள்ளது. இச்சதவீதத்தினை உயர்த்துவதற்கு தேவையான வாக்காளர் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட வேண்டும்.
50 சதவீதத்திற்கு கீழ் வாக்குப்பதிவாகியுள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அவற்றில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். எனவே எதிர்வரும் தேர்தலில் வாக்காளர்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் இடமின்றி நேர்மையாக வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.
தொடர்ந்து மகளிர் குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துணி பைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இதில் டி ஆர் ஓ மணிமேகலை,கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ்.மகளிர் திட்டம் திட்ட அலுவலர் செந்தில்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post சின்னம், பெயர் பொருத்தும் பணி தீவிரம் எந்தவித அச்சுறுத்தலுக்கும் இடமின்றி நேர்மையாக வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் appeared first on Dinakaran.