×

ராஜினாமா செய்யாமல் வேட்புமனு தாக்கல் விவகாரம்; சுயேட்சை வேட்பாளர் மனு நிராகரிப்பை எதிர்த்து மனு; தேர்தல் வழக்கு தொடர உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை, ஏப். 11: தேனி மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரித்ததை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடரலாம் என்று அரசு ஊழியரான வேட்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தான் தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரித்ததை எதிர்த்து மாவட்ட நூலக கண்காணிப்பாளர் அறிவரசு பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், அரசு ஊழியர் என்ற அடிப்படையில் பணியை ராஜினாமா செய்யாமல் தேர்தலில் போட்டியிட தகுதியில்லை எனக் கூறி தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இந்திய அரசியல் சாசனம் 102(1) வது பிரிவின் கீழ் தனது வேட்புமனுவை நிராகரித்தது சட்டவிரோதம். இப்பிரிவின்படி, மக்களவை உறுப்பினராவதில் இருந்து தன்னை தகுதிநீக்கம் செய்ய குடியரசு தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது. எனவே, எனது வேட்புமனு நிராகரித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். வேட்புமனுவை ஏற்று, வேட்பாளர் பட்டியலில் பெயரை சேர்க்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் பணியாற்றும் நூலக கண்காணிப்பாளர் பணி என்பது அரசு ஊழியர் பணியல்ல. வேட்புமனுவில் தான் அரசு ஊழியர்தான் என்று மனுதாரர் குறிப்பிடவில்லை. அதனால் தகுதி நீக்கம் வராது என்று வாதிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த வழக்கை விசாரிக்க முடியாது. ஏற்கனவே சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தபால் வாக்குப்பதிவும் தொடங்கி விட்ட நிலையில், வேட்புமனுவை நிராகரித்ததை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்றார். இதையடுத்து, தாமதமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டிருந்தால் மனுதாரர் தேர்தல் வழக்கு தொடரலாம் என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

The post ராஜினாமா செய்யாமல் வேட்புமனு தாக்கல் விவகாரம்; சுயேட்சை வேட்பாளர் மனு நிராகரிப்பை எதிர்த்து மனு; தேர்தல் வழக்கு தொடர உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Chennai High Court ,Theni ,Lok ,Sabha ,Teni ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...