×
Saravana Stores

வறட்சியிலிருந்து பயிர்களை பாதுகாப்பது எப்படி? விவசாயிகளுக்கு வேளாண்துறை அட்வைஸ்

பழநி, ஏப். 11: வறட்சியிலிருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது. சாகுபடியில் உள்ள பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வைக்கோல் அல்லது தென்னைநார் கழிவு போன்றவைகளை நிலப் போர்வையாக இருக்குமாறு நன்கு தூவி, சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியில் படுவதை தடுக்கலாம். இம்முறையில் நீர்பாய்ச்சப்பட்ட நிலங்களில் நீர் ஆவியாவதை தடுப்பது மட்டுமில்லாமல் களை வளர்வதையும் கட்டுப்படுத்தலாம்.

கோடையில் சாகுபடி செய்யப்பட்ட இறவை மக்காச்சோளம், பயறு வகைகளில் மேற்கண்டபடி மூடாக்கு போடுவதாலும், நீர்தேவை அறிந்து நீர்ப்பாய்ச்சுவதாலும், மகசூல் இழப்பை குறைக்கலாம். மேலும், மாலை நேரங்களில் நீர் பாய்ச்சி நீண்ட நேரம் வரை மண் ஈரம் காத்து வறண்ட சூழலிலிருந்து பயிரை காக்கலாம்.
குறைந்த நீரை கொண்டு பயிர்களைக் காத்திடவும், சாகுபடி செய்யப்பட்ட கரும்பு போன்ற பயிர்களைக் காத்திடவும் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசன முறைகளை கடைபிடிக்கும் போது வறட்சியிலிருந்து விடுபட ஏதுவாக இருக்கும்.

ஆழச்சால் அகலப்பாத்தியில் நீர்ப்பாய்ச்சும்போது ஒரு வரப்புவிட்டு மறு வரப்பிற்கு நீர்ப்பாய்ச்சும் முறையில் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட்சியை ஓரளவு சமாளிக்கலாம். முருங்கை சாகுபடியில் ஊடுபயிராக நிலக்கடலை, உளுந்து அல்லது வெங்காயம் போன்ற பயிர்களை சாகுபடி செய்தால் நீர் மேலாண்மையால் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும்.

காலையில் வெயில் தாழும் வரையிலும், மாலை வெயிலின் தாக்கம் குறைந்த நேரத்திலும் விவசாயப் பணிகளாகிய களையெடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடல் போன்ற பணிகளை மேற்கொள்வதால் விவசாயிகள் உடல் ஆரோக்கியம், நேரடி சூரிய கதிர்வீச்சுத் தாக்குதலை தவிர்க்கலாம். மேலும் இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாமென வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post வறட்சியிலிருந்து பயிர்களை பாதுகாப்பது எப்படி? விவசாயிகளுக்கு வேளாண்துறை அட்வைஸ் appeared first on Dinakaran.

Tags : Palani ,Agriculture Department ,Dinakaran ,
× RELATED பழனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை