×

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னத்துடன் பேலட் பேப்பர் பொருத்தும் பணி தீவிரம்

ஈரோடு, ஏப். 11: ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் 1,688 வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்துடன் கூடிய பேலட் பேப்பர் பொருத்தும் பணி நேற்று முதல் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கயம், குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,688 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் 31 வேட்பாளர்கள் களத்தில் போட்டியில் உள்ளனர். அதன்படி, ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் 4,056 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,028 கட்டுப்பாட்டு இயந்திரம், 2,198 விவிபேட் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்கனவே அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி வெளியிடப்பட்ட ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் இறுதி வேட்பாளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பேலட் பேப்பர் பொருத்தும் பணி நேற்று முதல் துவங்கியது.

அதன்படி, ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷ்-உதயசூரியன், அதிமுக வேட்பாளர் அசோக்குமார்-இரட்டை இலை, தமாகா வேட்பாளர் விஜயகுமார் சைக்கிள் சின்னம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன்-மைக் சின்னம், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஈஸ்வரன்-யானை சின்னம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோரின் பெயர், படம், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு மாநகராட்சி அலுவலகத்திலும், ஈரோடு மேற்கு தொகுதி ஈரோடு தாலுகா அலுவலகத்திலும், அதேபோல் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அந்தந்த வட்டாரங்களில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பேலட் பேப்பர் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியின் போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 1,688 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு விவிபேட் மற்றும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர், படம், கட்சி சின்னம் ஆகியவை இடம் பெறும். 31வது வேட்பாளர்களுக்கு அடுத்தபடியாக 32 சின்னமாக நோட்டா இடம் பெறும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பேலட் பேப்பர் பொருத்தும் பணி நிறைவடைந்ததும், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சரியாக ஓட்டு விழுகிறதா? என்பதை சோதனை செய்ய, 5 சதவீதம் அதாவது 1,000 ஓட்டுகள் போடப்பட்டு சோதனை நடத்தப்படும்.

இதில், ஏதேனும் குறைபாடு இருந்தால் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் உடனடியாக சரி செய்யப்படும். இதேபோல், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களின் நுழைவு வாயிலில் அந்த வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வரிசைப்படி வேட்பாளர்கள் பெயர், படம், அவர்கள் சார்ந்த கட்சி, சின்னங்கள் அடங்கிய பெரிய அளவிலான நோட்டீஸ் ஒட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

The post வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னத்துடன் பேலட் பேப்பர் பொருத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி:...