×

கைத்தறி நெசவுத்தொழிலை மேம்படுத்த தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும்

திருப்பூர், ஏப்.11: கைத்தறி நெசவு தொழிலை மேம்படுத்த தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் பிரசாரத்தின் போது நெசவு செய்து வாக்கு கேட்டு வாக்குறுதி அளித்தார். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக பாஜக சார்பில் ஏ.பி. முருகானந்தம் போட்டியிடுகிறார். அவர் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, தெற்கு, அந்தியூர், பவானி, கோபிசெட்டிபாளையம், பெருந்துறை ஆகிய பகுதிகளில் தினமும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உட்பட்ட சுண்டக்காபாளையம் பகுதியில் ஏ.பி.முருகானந்தம் வயலில் விவசாயம் செய்து கொண்டிருந்த பெண்களுடன் உரையாடி வாக்குகளை சேகரித்து களை எடுத்தார். மேலும், விவசாயிகளின் கோரிக்கைள் குறித்து கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துக்கூறினார். இதன் பின்னர் டி.ஜி. நால்ரோடு பகுதியில் உள்ள நெசவு செய்யும் இடத்திற்கு சென்ற ஏ.பி. முருகானந்தம் நெசவு தொழில் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும், நெசவுத்தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல தேவையான அனைத்து வசதிகளை செய்து தருவேன் எனவும் நெசவாளர்களிடம் உறுதியளித்தார். இந்நிலையில் நேற்று திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்திரகாளியம்மன் கோவில், காலேஜ் ரோடு ஹவுசிங்யூனிட், சாதிக் பாட்சாநகர், முத்துசாமி வீதி, கே.என்.பி.புரம், பங்களா வீதி, இந்திராநகர், மரக்கடை ஸ்டாப், கொங்கணகிரி, பாறைக்குழி, மாஸ்கோநகர், சரண் தியேட்டர், முருகம்பாளையம் மாகாளியம்மன் கோவில், வளையங்காடு, சாமுண்டிபுரம், குலாம்காதர் லே அவுட், கருப்பராயன் கோவில், எம்.ஜி.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் வாக்குகள் சேகரித்தார்.

இதையடுத்து பிரசாரத்தின் போது பா.ஜனதா வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் பேசியதாவது: மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் நாடு முழுவதும் மக்கள் பயனடைந்துள்ளார்கள். அவர்களின் வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வு அளித்து வரும் பனியன் தொழிலை ஊக்குவிக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும். நூல் உற்பத்தியை முறைப்படுத்தி நூல் விலையை கட்டுப்படுத்த 3 மாதங்களுக்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்வதற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். கைத்தறி நெசவு தொழிலை மேம்படுத்த கைத்தறி துணிகள் மற்றும் பவானி ஜமுக்காளங்கள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post கைத்தறி நெசவுத்தொழிலை மேம்படுத்த தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,BJP ,A. B. Murukanantham ,B. Murukanandam ,
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...