×

அசுர வேகத்தில் வந்த கார் டூவீலர், தடுப்பில் மோதி அந்தரத்தில் பறந்து கவிழ்ந்தது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேர் பலி

திருமங்கலம்: திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் நேற்று காலை அசுர வேகத்தில் வந்த கார், தடுப்புகள், டூவீலர் மீது மோதி 4 டிராக் தாண்டி எதிர்ப்புற சர்வீஸ் ரோட்டுக்கு பறந்து சென்று விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் கனகவேல் (62). மதுரை பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் மணிகண்டன் (32). நேற்று முன்தினம் கனகவேல், மனைவி கிருஷ்ணகுமாரி (58), மருமகள் நாகஜோதி (28), பேரன் சிவ ஆதித்யா (9), பேத்திகளான இரட்டை குழந்தைகள் சிவ ஆத்மிகா (6), சிவ (6) மற்றும் உறவினர்கள் மீனா, ரத்தினசாமி ஆகியோருடன் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு காரில் சென்றனர். காரை மணிகண்டன் ஒட்டி சென்றார். திருவிழா முடிந்தப்பின்பு நேற்று அதிகாலை தளவாய்புரத்தில் இருந்து இவர்கள் காரில் மதுரைக்கு புறப்பட்டனர்.

சிவகாசியில் உள்ள மணிகண்டனின் அத்தையை இறக்கிவிட்ட பின்பு விருதுநகர் வழியாக மதுரை நோக்கி வந்தனர். விருதுநகர் – திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் சிவரக்கோட்டை பகுதியில் காலை 6.30 மணியளவில் படுவேகமாக வந்த கார், எதிர்பாராதவிதமாக தடுப்புகள் மீது மோதி உரசி, முன்னால் டூவிலரில் சென்ற கொய்யாப்பழ வியாபாரியான திருமங்கலம் நடுக்கோட்டையை சேர்ந்த பாண்டி (52) மீதும் மோதியது. கார் மோதிய வேகத்தில் பாண்டி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். டூவீலர் மீது மோதிய வேகத்தில் கார் நிலைதடுமாறி நான்கு வழிச்சாலை தடுப்புகள் மீது மோதி சினிமா காட்சியில் வருவதைப் போல நான்கு டிராக்குகளைக் கடந்து அந்தரத்தில் பறந்து எதிர்திசையில் உள்ள எஸ்பி நத்தம் பிரிவு சர்வீஸ் ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த கனகவேல், அவரது மருமகள் நாகஜோதி, இரட்டை குழந்தைகளில் ஒன்றான சிவ ஆத்மிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கனகவேல் மனைவி கிருஷ்ணகுமாரி, குழந்தைகள் சிவ ஆதித்யா, சிவ ஆகியோர் படுகாயமடைந்தனர். சீட்பெல்ட் போட்டு கார் ஓட்டியதால் மணிகண்டன் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். காலை வேளையில் நான்கு வழிச்சாலையில் நடந்த இந்த படுகார விபத்தினை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சிறிது நேரத்தில் கனகவேலின் மனைவி கிருஷ்ணகுமாரி உயிரிழந்தார். படுகாயத்துடன் மதுரைக்கு மேற்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரட்டை குழந்தைகளில் மற்றொரு குழந்தையான சிவ நேற்று பிற்பகல் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டிவந்த மணிகண்டன் அரை தூக்க நிலையில் காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. விபத்து குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டீக்கடையில் இருந்த 10 பேர் உயிர் தப்பினர்
விபத்தில் சிக்கிய கார் அந்தரத்தில் பறந்து சென்று டிவைடரில் மோதி திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையை தாண்டி சர்வீஸ் ரோட்டில் கவிழ்ந்தது. அந்தரத்தில் பறந்து கவிழந்த கார் இன்னும் 10 அடி தாண்டி விழுந்திருந்தால் அங்கிருந்த டீக்கடையின் மீது விழுந்திருக்கும். அதற்கு முன்பே கார் விழுந்ததால், அதிகாலையில் டீக்கடையில் டீ குடித்து கொண்டிந்தவர்கள் 10 பேர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.

The post அசுர வேகத்தில் வந்த கார் டூவீலர், தடுப்பில் மோதி அந்தரத்தில் பறந்து கவிழ்ந்தது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Tirumangalam ,
× RELATED திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை...