×

விண்வெளி, ராணுவம், உற்பத்தியில் நாட்டை தமிழகம் வழி நடத்துகிறது: வேலூர், மேட்டுப்பாளையம் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

சென்னை: விண்வெளி, ராணுவம், உற்பத்தியில் நாட்டை தமிழகம் வழிநடத்துகிறது என்று வேலூர், மேட்டுபாளையத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

பாஜ கூட்டணி கட்சிகளை சேர்ந்த வேலூர் தொகுதி புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், பாமக வேட்பாளர்கள் ஆரணி கணேஷ்குமார், தர்மபுரி சவுமியா அன்புமணி, பாஜ வேட்பாளர்கள் திருவண்ணாமலை அஸ்வத்தாமன், கிருஷ்ணகிரி நரசிம்மன், கோவை அண்ணாமலை, நீலகிரி எல்.முருகன், திருப்பூர் ஏ.பி.முருகானந்தம், பொள்ளாச்சி வசந்தராஜன் ஆகியோரை ஆதரித்து வேலூர் மற்றும் மேட்டுபாளையத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
2024ல் வரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் வரும் ஆண்டு நமக்கு வளர்ச்சி தரும் ஆண்டாக அமையவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 21ம் நூற்றாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தையும் நாட்டையும் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றி காட்டுவோம். கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணியும், பாஜவும், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக்குவதற்கான பணியை செய்து இருக்கின்றன. இந்தியா உலக வல்லரசாக மாறிக் கொண்டிருக்கிறது.

அதில், தமிழகம் மிகப்பெரிய பங்காற்றி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. விண்வெளித்துறையிலும் தமிழகம் நாட்டையே வழிநடத்தி வருகிறது. உற்பத்தியிலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகம் முக்கிய பங்காற்றி வருகிறது. ராணுவ பாதுகாப்பு உற்பத்தி மையங்கள் மூலம் ராணுவ தளவாட உற்பத்தியிலும் பெரிய அளவிலான பங்கை தமிழகம் அளித்து வருகிறது. அதேபோல் தமிழக இளைஞர்கள் இந்திய பொருளாதாரத்தையும் வலுப்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் வருகையையொட்டி கடைகள் மற்றும் சாலைகள் அடைப்பு, போக்குவரத்து தடை விதிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். கொளுத்தும் வெயிலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.

டீக்கடைக்காரனாக வருவதில் மகிழ்ச்சி
மேட்டுபாளையம் பொதுக்கூட்டத்தில் மோடி பேசும்போது, ‘‘கோவையின் ஆற்றலும், நீலகிரியின் அழகும் ஒருங்கே பெற்ற இடம் மேட்டுப்பாளையம். இது, தேயிலை தோட்டங்கள் சூழ அமைந்துள்ளது. இப்பகுதிக்கு வந்துள்ளதால், பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும், ஒரு டீக்கடைக்காரனுக்கு மகிழ்ச்சியாக இருக்காதா? என்ன..? இன்னும் சிலதினங்களில் தமிழ்புத்தாண்டை ெகாண்டாட உள்ளீர்கள். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்’’ என்றார்.

நடிகை நமீதாவுக்கு அனுமதி மறுப்பு
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நடிகை நமீதா, அவரது கணவருடன் தாமதமாக வந்தார். ஆனாலும், மேடைக்கு செல்லவேண்டும் என இருவரும் பிடிவாதம் பிடித்தனர். ஆனால், போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். பார்வையாளர்கள் அமர்ந்துள்ள இடத்தில் முன்வரிசைக்கு செல்ல அனுமதி தாருங்கள் என மீண்டும் கேட்டனர். அதற்கும் போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். தாமதமாக வந்த யாரையும் உள்ளே அனுமதிக்க இயலாது என கறாராக கூறிவிட்டனர். நமீதாவும், அவரது கணவரும் போலீசாருடன் வாக்குவாதம் செய்கிற தகவல் உள்ளே சென்றது. இதையடுத்து, பா.ஜ தலைமையின் உத்தரவை ஏற்று, இருவரும் அனுமதிக்கப்பட்டனர்.

பிரதமரை வரவேற்க வராத மக்கள்
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு அவரை காண சாலைகளில் பெருமளவில் மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை- பெங்களூரு சாலையில் அப்துல்லாபுரம, மேல்மொணவூர், கீழ்மொணவூர், கருகம்பத்தூர், கொணவட்டம் பகுதி மக்கள் யாரும் வராமல் சாலைகள் வெறிச்சோடியே காணப்பட்டது. அதேபோல் காட்பாடி சாலை, பழைய பைபாஸ் சாலை, கோட்டை சுற்றுச்சாலை என்று பிரதமரின் வாகன அணிவகுப்பு சென்ற பாதைகளில் மக்களே இல்லாமல் இருந்தது, ஆனால் பிரதமர் மோடி கை ஆட்டியபடி சென்றார்.

அதிமுக குறித்து வாய் திறக்காத மோடி
பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி 50 நிமிடம் பேசினார். மோடி பேசுகையில், திமுக., காங்கிரஸ் பற்றி மட்டும் விமர்சனம் செய்தார். அதிமுக பற்றியும், அதிமுக தலைமை பற்றியும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், வேட்பாளர்கள் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை மீது கோபம்: பேசாமல் சென்ற மோடி
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜ வேட்பாளர்களின் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி கலந்துகொண்டார். மேடையிலிருந்த ஒருவர் மோடிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மோடியிடம் அண்ணாமலை 3 முறை ஏதோ கூறி அழைத்து கை காட்டி பேசினார். ஆனால் அதனை மோடி கண்டுகொள்ளவில்லை. பின்னர், அண்ணாமலை நோக்கி கை நீட்டி மோடி கோபமாக ஏதோ சொல்கிறார். உடனே அண்ணாமலையின் முகம் மாறியது. பின்னர் அண்ணாமலையின் முகத்தை கூட பார்க்காமல் மோடி வேகமாக சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மோடி பேசும்போது வெளியேறிய மக்கள்
மோடி பிரசார கூட்டத்துக்கு லோடு வேன்களில் ஏராளமான ஆண்களும், பெண்களும் அழைத்து வரப்பட்டனர். ஆனால் மோடி பேசிக்கொண்டிருந்தபோதே கலைந்து செல்ல தொடங்கியதால் மேடையில் இருந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

The post விண்வெளி, ராணுவம், உற்பத்தியில் நாட்டை தமிழகம் வழி நடத்துகிறது: வேலூர், மேட்டுப்பாளையம் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,PM Modi ,Vellore, Mettupalayam ,Chennai ,Modi ,New Justice Party ,AC Shanmugam ,Vellore ,BJP ,BAM ,Arani ,Mettupalayam ,
× RELATED “தேர்தல் நடத்தை விதி அமலில்...